Yarl Geek Challenge – 4

சிறந்த கணினித் தொடர்பாடல் திறமைகள், படைப்பாற்றலினுடாக புதிய கண்டுபிடிப்புக்களை வழங்கும் இளம் தொழில்நுட்பவல்லுநர்களை அடையாளங்காணும் போட்டி நிகழ்ச்சியான Yarl Geek Challenge இன் நான்காவது பருவத்தின் அறிமுகமும் ஆரம்பமும், எதிர்வரும் சனிக்கிழமை (12) மதியம் 1.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை நிலைய மண்டபத்தில் (TCT Hall) இடம்பெறவுள்ளது.

yarl-it-hub-geek-challenge

அன்றைய தினம், Yarl Geek Challengeஇன் நான்காவது பருவப் போட்டிகள் பற்றிய அறிமுகமும், அதனைத் தொடர்ந்து Blue Ocean Ventures (Pvt) Ltd. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரஜீத் பாலசுப்பிரமணியம், Dialog Axiata நிறுவனத்தின் ஷப்ராஸ் ரஹீம், Zigzag.lk நிறுவனத்தின் நிறுவுநர் தினுந்து நவரட்ண உட்படப் பல தொழில் முயற்சியாண்மையாளர்களது உரைகளும் இடம்பெறும். அதுமட்டுமல்லாது, இறுதியாக பல தொழில் முயற்சியாளர்கள் பங்குபற்றும் திறனாய்வுக் கலந்துரையாடலும் (Panel Discussion) இடம்பெறும். இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு, http://www.yarlithub.org/yarl/community-meet-up/ என்ற இணையத்தள முகவரிக்குச் சென்று, உங்கள் வருகையைப் பதிவு செய்யலாம். இதற்கான அனுமதி இலவசம் ஆகும்.

இந்த வருடமும் வழமை போன்று, ஜூனியர், சீனியர் என்றவாறு போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன. பாடசாலை மாணவர்கள், ஜூனியர் பிரிவிலும் பல்கலைக்கழக மற்றும் தனியார் கல்வி நிறுவன மாணவர்கள், சீனியர் பிரிவிலும் பங்குபற்றுகின்றனர். பாடசாலை மாணவர்கள் சீனியர் பிரிவில் பங்குபற்ற முடியாது என்று கட்டாயம் இல்லை.

இம்முறை, ஜூனியர் பிரிவு போட்டியானது வடமாகாண கல்வித் திணைக்களத்துடன் இணைந்து, வடமாகாண பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தப்படவுள்ளது.இந்தப் போட்டியில், மாணவர்கள் தனியாகவோ அல்லது ஆகக் கூடுதலாக மூன்று உறுப்பினர்களை உடைய குழுவாகவோ பங்குகொள்ளலாம். எனினும், குழுவாகப் பங்குகொள்வது வரவேற்கத்தக்கது என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். போட்டிகள், இணைய செயலி உருவாக்கம், அலைபேசி செயலி உருவாக்கம், வன்பொருள் செயலி உருவாக்கம் என மூன்று பிரிவாக இடம்பெறும். மாணவர்கள் விரும்பிய ஒரு பிரிவைத் தெரிவு செய்து அதற்குரிய வகையில் தமது செயற்றிட்டத்தினைச் செய்யலாம்.

இப்போட்டிக்கான மதிப்பீடுகள், ஒக்டோபர் ஆரம்பத்தில் வலய மட்டத்தில் இடம்பெறும். பின்னர், வலய மட்டங்களில் தெரிவாகும் அணிகளுக்கான மாகாண மட்டத்திலான இறுதிப்போட்டி, ஒக்டோபர் 16ஆம், 17ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும்.16ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில், மாணவர்கள் தமது புத்தாக்கத்தினை துறைசார் வல்லுநர்களோடு சேர்ந்து மேலும் மெருகேற்றிக்கொள்ளலாம். ஒக்டோபர் 17ஆம் திகதி இடம்பெறும் இறுதிப்போட்டியில் மாணவர் குழுக்கள் ஓர் அளிக்கையைச் செய்ய வேண்டும். அத்தோடு, அதன்போது தாம் செய்த மென்பொருளை அல்லது உபகரணத்தினைக் காட்டவேண்டும். போட்டி விதிகளுக்கமைய, நடுவர் குழுவினால் மதிப்பீடு செய்யப்படும். அவர்களின் தீர்ப்பே இறுதியானதாகும்.

தமது விண்ணப்பப் படிவங்களை மாணவர்கள், மின்னஞ்சலூடாகவோ, தபாலினூடாகவோ, செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் வந்தடையும் வண்ணம் அனுப்பப்பட வேண்டும். மின்னஞ்சலினூடான விண்ணப்பங்களை அனுப்புவதாயின், event@yarlithub.org என்ற முகவரிக்கும் தபாலினூடான விண்ணப்பங்களை அனுப்புவதாயின் “துரைசிங்கம் லெனின் அறிவழகன், உதவிக் கல்விப்பணிப்பாளர் (தகவல் தொழில்நுட்பம்), வடமாகாணக் கல்வித் திணைக்களம், மருதனார் மடம், யாழ்ப்பாணம்” என்ற முகவரிக்கும் அனுப்பிவைக்கப்பட வேண்டும். போட்டியில் பங்குபற்றும் அனைத்து மாணவர்களும், 2015ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி 19 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். இந்தப் பிரிவுக்கான மேலதிக விபரங்கள், விண்ணப்பப்படிவம் என்பவற்றை http://www.yarlithub.org/yarl/junior/ என்ற இணையத்தள முகவரிக்கு சென்று பார்வையிட முடியும். போட்டி தொடர்பான சந்தேகங்கள் இருப்பின், கெ.சர்வேஸ்வரன் (077-2244192, sarves@yarlithub.org), பா.சயந்தன் (077-3478596, sayanthan@yarlithub.org) ஆகியோரைத் தொடர்பு கொள்ள முடியும்.

சீனியர் பிரிவுப் போட்டியானது இரண்டு பாகங்களாக இடம்பெறவுள்ளது. மூன்று நாட்களாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள Yarl Geek Challenge நான்காவது பருவத்தின், முதலாவது பாகத்தில், ஐந்து அல்லது ஆறு அணிகள் தெரிவுசெய்யப்பட்டு, இறுதிப் போட்டிகள் கொழும்பில் இடம்பெறவுள்ளன. இதன் வெற்றியாளருக்கு பல ஆச்சரியகரமான பரிசுகளும் எதிர்பாரா விடயங்களும் காத்திருக்கின்றன. தமது விண்ணப்பப்படிவங்களை அணிகள், செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு முதல் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்தப்பிரிவு பற்றிய மேலதிக விபரங்களை http://www.yarlithub.org/yarl/yarl-geek-challenge-season-4-senior என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடலாம்.

கடந்த மூன்று வருடங்களாக மிகச் சிறந்த முறையில் திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டு, https://busseat.lk/ உட்பட பல புதிய நிறுவனங்கள் உருவாவதற்கு முதுகெலும்பாக Yarl Geek Challenge இருந்தமை அறியத்தக்கது. அந்த வரிசையில், கடந்த வருடம் போன்று இந்த வருடமும் Yarl IT Hub நிறுவனமானது Lankan Angel Network நிறுவனத்துடன் இணைந்து இப்போட்டியை நடத்துகின்றது. இந்தப் போட்டிகளில் பங்குபெறும் போட்டியாளர், IT தொழிற்துறைசார் வல்லுநர்களுடன் பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், பெறுமதிமிக்க தொழிற்துறை அனுபவங்கள், தங்களது திறமைகளை உலகளாவிய தகவல் தொழில்நுட்ப தொழிற்துறையில் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு, Lankan Angel Network நிறுவனத்தில் முதலீடு போன்ற பல விதமான அனுகூலங்களை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts