நாடு முழுவதும் இலவச WiFi வசதி வழங்குவதாகத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட பலூன் திட்டத்தின் பின்புலத்தில் சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல் உள்ளதா என ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
திட்டத்துடன் தொடர்புபட்டுள்ள ராமா என்ற நிறுவனம் குறித்து சிக்கல் காணப்படுவதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
முழு நாடும் உள்ளடங்கும் வகையில் WiFi ஊடாக அதிவேக இணையத்தள சேவை ஒன்றை வழங்குவதாகத் தெரிவித்து கடந்த வருடம் பெப்ரவரி மாதம் பலூன் ஒன்று பறக்கவிடப்பட்டது.
இலங்கையின் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ICTA வின் பிரதம நிறைவேற்று அதிகாரியான முகுந்தன் கனகே தலைமையில் அனுப்பப்பட்ட இந்த பலூன் 2016 பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி கம்பளையில் வீழ்ந்தது.
கூகுள் பலூன் திட்டத்தின் கீழ் 13 பலூன்களைப் பறக்கவிட்டு 10,000 WiFi வலயங்களை நிர்மாணிப்பதாகத் தெரிவித்து 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கொழும்பில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது.
ICTA நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான முகுந்தன் கனகே மற்றும் கூகுள் நிறுவனத்தின் உப தலைவர் மைக் கெசட் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
குறித்த திட்டம் தோல்வியடைந்ததன் பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ராமா திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியிடப்பட்டன.
இதேவேளை, இலங்கையை ஒன்றிணைக்கும் திட்டம் வெற்றியளிக்காவிடின் இராஜினமா செய்வதாக ICTA நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான முகுந்தன் கனகே தெரிவித்ததாக சன்டே டைம்ஸ் பத்திரிகையின் வர்த்தகப் பகுதியில் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், அவரின் பதவிக்காலம் எதிர்வரும் மார்ச் 3 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அவரின் தலைமையில் செயற்படுத்தப்பட்ட கூகுள் பலூன் திட்டம் வெற்றியளிக்காத நிலையில், அவரின் பதவிக்காலத்தை 2019 வரை நீடிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் வசதிகளுக்கான பதில் அமைச்சர் தாரானாத் பஸ்நாயக்க தெரிவித்தார்.
அது தொடர்பாக பணிப்பாளர் சபையின் பிரேரணையை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நாடு திரும்பியதுடன் முன் வைப்பதாக பதில் அமைச்சர் கூறினார்.
எனினும், இந்த யோசனை தொடர்பில் அமைச்சுக்கு அறிவிக்கப்படவில்லை என தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் வசதிகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை, முகுந்தன் கனகேவிற்கு சொந்தமான செய்மதி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று 2006 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.