O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு – 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அனைத்து பாடங்களிலும் A சித்தி!

2018ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்தால் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டன.

இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 ஆயிரத்து 413 பேர் ஒன்பது பாடங்களிலும் A சித்திகளை பெற்றுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எனினும் முதல் 10 இடங்களில் தமிழ் மொழிமூலம் தோற்றிய எந்தவித மாணவர்களும் இடம்பெறவில்லை.

பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய கொழும்பு விசாகா மகளிர் கல்லூரியின் மாணவி, நிலக்னா வர்ஸ வித்தான அகில இலங்கை ரீதியில் முதலாவது இடத்தை பெற்றுள்ளார்.

விசேடமாக இரண்டாவது இடத்தை மூன்று பேர் பெற்றுள்ளனர். அதற்கமைய விசாகா மகளிர் கல்லூரியின் மாணவி சஜித்தி ஹங்சதி, கம்பஹா ரத்னாவலி மகளிர் மகா வித்தியாலயத்தின் மாணவி சஞ்சானி திலேக்கா குமாரி, மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தின் மாணவி மிந்தி ரெபேக்கா ஆகியோர் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளனர்.

ஐந்தாவது இடத்தை கேகாலை புனித ஜொசப் கல்லூரியின் மாணவி கயத்ரி ஹர்சிலா லிஹனி கடுவாரச்சி பெற்றுள்ளார்.

ஆறாவது இடத்தை ஐந்து பேர் பெற்றுள்ளனர். அதற்கமைய கொழும்பு தேவி பாலிகா மகா வித்தியாலயத்தின் மாணவி சந்தலிமுத்துனிமா ரத்நாயக, கொழும்பு ரோயல் கல்லூரியின் மாணவன் சஹான் யசங்க சமரகோண், அதே கல்லூரியை சேர்ந்த மாணவன் கவிரு மெத்னுக்க, காலி மஹிந்த கல்லூரியின் சஸ்மித்த ஆகாஸ்வர லியனகே, ஹொரணை தக்சிலா கல்லூரியின் மாணவி ஹமாசி ஹெரந்திகாவும் ஆறாவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்காக ஆறு இலட்சத்து 56 ஆயிரத்து 984 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அதில் ஐந்து இலட்சத்து 18 ஆயிரத்து 184 பேர் பரீட்சைக்காக தோற்றியிருந்தனர். இதில் 71.66 சதவீதமானோர் கல்விப் பொதுத்தராதர உயர் தரத்தை தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

Related Posts