ISIS தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துங்கள். இல்லையேல் மீண்டும் ஒரு உலகப்போர் ஏற்படும்- அமைச்சர் பா.டெனிஸ்வரன்

இலங்கைக்கு நேற்று வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் இன்று 07-02-2016 காலை யாழ்.குடாநாட்டுக்கு வருகை தந்துள்ளார். அங்கு வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை காலை 9.30 மணியளவில் முதலமைச்சரது உத்தியோகபூர்வ காரியாலயத்தில் சந்தித்து விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இவ் விசேட சந்திப்பில் வடக்கு முதல்வரால் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. இதில் காணாமல்போனோர், தமிழ் அரசியல்கைதிகள், காணி அபகரிப்புக்கள் மற்றும் மாகாண அபிவிருத்திக்கான நிதிப்பற்றாக்குறை போன்ற முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
12711019_10208437622247249_113944093636985108_o

இதேவேளை, இச் சந்திப்பின் பின்னர் வடக்கு மாகாண போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் அவர்களிடம் பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.இன்று உலக நாடுகள் பலவற்றில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், அவற்றினைக் கட்டுப்படுத்தவேண்டும் என்றும், குறிப்பாக ISIS தீவிரவாதிகளின் அத்துமீறிய நடவடிக்கைகள் அனைத்தும் உடன் கட்டுப்படுத்தப்படவேண்டும், இல்லையேல் இவை மீண்டும் ஓர் உலகப்போருக்கு கொண்டு சென்றுவிடும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளமையை அறியமுடிகின்றது.

அதேவேளை மனித உரிமைகள் உலகில் பாதுகாக்கப்படவேண்டும் என்றால், ஒவ்வொரு நாட்டிலும் சட்டவாட்சி (Rule of Law) கட்டாயம் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்பதையும் அத்தோடு மனித உரிமைகள் பட்டயம் மற்றும் அதற்க்கான பின்னேடுகள் (UDHR & Protocol) வலுவாகக் கடைப்பிடிக்கப்படவேண்டும் என்பதையும் அமைச்சர் அங்கே வலியுறுத்தியதாகவும் அறிய முடிகின்றது.

அதற்க்கு பதிலளித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் அவர்கள், ISIS தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் தொடர்பாகவும், மனித உரிமைகளை நிலைநாட்டுவது தொடர்பாகவும் தாம் அதி தீவிர கவனம் செலுத்துவதாக தெரிவித்ததாகவும் அறிய முடிகின்றது.மேலும் இச் சந்தர்ப்பத்தில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டுமெனில் உலகில் அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டாலே சாத்தியமாகும் என்பதை அமைச்சர் தெரிவித்து நிற்கின்றார்.

Related Posts