ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் அண்மைய வரைபடத்தில் இலங்கையும் ஒரு இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் தளமாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளதாக இன்றைய தேசிய சிங்கள நாளிதழொன்று அறிவித்துள்ளது.
சர்வதேச பாதுகாப்பு நிலைமை, மோதல்கள் குறித்து ஆய்வு செய்யும் அமெரிக்க நிறுவனமான “சர்வதேச மோதல் நிலை தொடர்பான ஆய்வு நிலையம்” இறுதியாக மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அமைப்பினால் கடந்த நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஐ.எஸ். அமைப்பின் ஆட்சேர்ப்புப் பரப்பு மற்றும் இலக்குவைத்த தாக்குதல் தளம் என்பன உள்ளடக்கிய வரைபடத்தில் இலங்கை உட்படுத்தப்பட்டிருக்க வில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வருடத்தில் இலங்கையிலிருந்து சிரியாவுக்கு ஆட்களை வரவழைக்க முடியுமாக இருந்தமையும், அவ்வாறானவர்கள் மூலம் இலங்கையில் தொடர்புகளை வைத்திருக்க முடியுமாக இருந்தமையும் இம்முறை வரைபடத்தில் இலங்கையை சேர்ப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அந்த ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுக் கூறியுள்ளது.
இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு இலங்கையிலும் பாதுகாப்பு நிலைமைகளை பலப்படுத்தியுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இலங்கையின் விமான நிலையங்கள் மற்றும் முக்கிய பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.