நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய அரசாங்கத்தின் மாற்றத்துடன் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA) தலைவர் பதவி மற்றும் பணிப்பாளர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மாற்றமானது புதிய அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்லக்கூடியது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வகையில் புதிய தலைவராக நியமிக்கப்ட்டுள்ள திருமதி சித்ராங்கனி முபாரக் நேற்று முன்தினம் (09) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். முகாமைத்துவ பணிப்பாளராக திரு. முகுந்தன் சஞ்சய், டாக்டர் அஜித் மதுரப்பெரும, திரு ஆனந்த விஜயரத்ன, திரு. உபுல் குமாரப்பெரும, மற்றும் சனுகா வத்தேகம, ஆகியோர்கள் தற்போது புதிய பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களாவார்.
திருமதி சித்ராங்கனி முபாரக் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத்துறைப் பட்டப்படிப்பினை முடித்தவர். கிராமிய சமூகத்துக்கான தொழில்நுட்பத்துறையில் தொழில்நுட்பதாரியாக பணியாற்றியுள்ளார். ICTA நிறுவனத்தின் இணையத்துடன் இணைந்த சமூகத்துறையில் (e-Society) இலங்கையின் இணைய அபிவிருத்தி தொடர்பான திட்டத்தில் 09 வருடங்களாக பணியாற்றியுள்ளார்.
அதன் பின்னர் SLIIT இல் சிரேஷ்ட முகாமையாளராக இணைந்தார். அபிவிருத்தி சார்பாக கிட்டத்தட்ட 250 திட்டங்களின் ஆரம்பத்திற்கும் வௌியீட்டுக்கும் உந்துதலாக விளங்கியவர். இவற்றுள் பல திட்ட ஆராய்ச்சிகள் சர்வதேச ரீியில் அங்கீகாரம் பெற்றுள்ளன. இவர் தற்போதும் களனி பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு பீடத்தின் சபையின் அங்கத்தவராகவும் அத்துடன் தேசிய அறிவியல் அறக்கட்டளை உணவு பாதுகாப்பு தொடர்பான தேசிய ஸ்டீரிங் குழுவின் அங்கத்தவராகவும் அங்கத்துவம் வகித்து வருகிறார்.
ICTA இன் தலைவராக நியமிக்கபடுவதற்கு முன்னர் இவர் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 12 வருடங்களாக அந்த துறையில் பணியாற்றிய தலைமை நிர்வாக அதிகாரி ரெஷான் தேவபுரா தனது சேவைக்காலத்தினை நிறைவு செய்யவுள்ள நிலையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட முகுந்தன் சஞ்சய் அவரது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இப்புதிய நியமனத்தினூடாக உள்ளூர் தொழில்நுட்ப கொள்கையினை தனியார் மற்றும் அரசாங்க துறைகளின் மூலம் சர்வதேச அளவில் சிறந்த நிலையில் பேண வேண்டும். அத்துடன் புதிய கண்டுபிடிப்புக்கள், சீர்திருத்தங்கள், புதிய கொள்கைகளின் மூலம் தொழில்நுட்பத்துக்கு புதிய சந்தர்ப்பங்களை பெற்றுக் கொடுத்தல் ஆகியன முக்கிய கொள்கைகளாக இடம்பெறும்.
புதிதாக நியமிக்கப்பட்ட முகுந்தன் மற்றும் ரெஷான் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை ஒன்றாக இணைந்து சேவையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்பத்துறையில் புதிதாக நியமனம் பெற்ற முகுந்தன் இத்துறையில் மிக்க அனுபவமுள்ள இளம் சந்ததியாவார். இவர் தொழில்நுட்ப கணணித் துறையில் மிக இளவயதில் அதாவது 16 வயதில் காலடியெடுத்து வைத்து கணணிப்படிப்பில் முதுகலை மாணிப்பட்டப்படிப்பினை லண்டன் பல்கலைக்கழகத்தில் முடித்தவர்.
இவர் ஊடகங்களுக்கான செய்மதி தொடர்பாடல் துறையினை அறிமுகம் செய்து வைத்தவராவார். அத்துடன் புதிதாக நியமனம் செய்யப்பட்ட இவர்கள் ரெஷான் தேவப்புரவுக்கு தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். அதன் போது இலங்கையின் தொழில்நுட்பத்துறைக்கு இவரின் பங்களிப்பு இன்றியமையாதது என்று குறிப்பிட்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.