HNDA, HNDM பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்; வியாழக்கிழமை முடிவு அறிவிக்ப்படும் – டக்ளஸ் உறுதியளிப்பு.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் HNDA, HNDM, பட்டத்தினை பூர்த்தி செய்த பட்டதாரிகள் இன்று கனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். இன்றைய தினம் வீரசிங்கம் மண்டபத்தில் பட்டதாரிப் பயிலுநர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் இவர்களின் ஆர்ப்பாட்டமும் இடம் பெற்றது.

நாங்கள் பெற்ற பட்டம் பொய்யானதா? HNDA, HNDM பட்டங்கள் பொய்யானதா? , பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 46(90) இலக்க சுற்று நிருபம் வெறும் காகிதமா, பட்டங்களை பெற்ற பட்டதாரிகளின் எதிர்காலம் என்ன?,உயர்கல்வி அமைச்சினால் வழங்கப்படும் சான்றிதழின் பெறுமதி இதுதானா? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

வடக்கு மாகாணப்பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவசரப்படாமல் இருங்கள். வெளிநாடுகளைப் போல் அல்லாது எமது அரசாங்கம் வேறுபட்ட முறையிலேயே செயற்பட்டு வருகின்றது.

மற்றைய மாவட்டங்களில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது எதற்காக எமக்கு வழங்கப்படவில்லை என்று பட்டதாரிகள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர் வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்துச் செய்யப்படும்.தென்னிலங்கையில் பல்வேறு பட்ட பிரிவுகளில் பட்டதாரிகள் உள்ளனர். அவர்களையும் உள்வாங்க வேண்டும் என்ற பிரச்சினை உருவாகியுள்ளது. அதனால ஒரு குழப்பம் ஒன்று நிலவி வருகின்றது. நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

மற்றய மாவட்டங்களுக்கு தவறுதலாகவே நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறி, அதனை இரத்துச் செய்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக எனக்கு கூறப்பட்டுள்ளது. அது இரத்துச் செய்யப்படாது விடின் உங்களுக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவே நினைத்துக் கொள்ளுங்கள்.

அதனால் உங்களது பிரச்சினை தொடர்பில் நாளை மறுதினம் அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளேன். நீங்கள் நம்பிக்கையோடும் பொறுமையோடும் இருங்கள்.உங்களுக்கு எதிர்வரும் வியாழக்கிழமை முடிவு அறிவிக்ப்படும் இதை உத்தரவாதமாக ஏற்றுக் கொள்ளுங்கள் எனவும் அச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துள்ளார்.

வீரசிங்கம் மண்டபத்தில் வடமாகாணப்பட்டதாரிப் பயிலுநர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் வைபவம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இவர்கள் மண்டபத்திற்க முன் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts