இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் மேற்கொள்ளப்படவுள்ள எட்கா (ETCA) உடன்படிக்கை தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிரணியினர் வௌியிடும் எதிர்ப்பு தொடர்பாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வர்த்தக சேவை உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய சீபா (CEPA) உடன்படிக்கை தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெற்றன எனவும், தற்போது கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்த சிலர் அடங்கிய ஒன்றிணைந்த எதிரணியினர் இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு வௌியிடுவது வேடிக்கையாக உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எட்கா உடன்படிக்கையின் மூலம் இலங்கையர்களுக்கு பாரிய தொழில் வாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், எட்கா தொடர்பில் தற்போதைக்கு வரைபு மாத்திரமே வெளியாகியுள்ளது, இறுதி படிவம் தயாரிக்கப்படவில்லை என்றும் சின்ஹா இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் எவரது பெயரையும் குறிப்பிட்டு கருத்துக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.