ATM அட்டை மோசடி: புதிய பாதுகாப்பு நடவடிக்கை!

ஏ.ரி.எம் (ATM) அட்டைகளுக்கூடாக இடம்பெறும் மோசடிகளை தடுப்பதற்காக இலங்கை மத்திய வங்கி புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகம் செய்துள்ளது.

இதேவேளை ஏ.ரி.எம் வலையமைப்புக்கூடாக பணப்பரிமாற்றம் செய்யும்போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் இலங்கை மத்திய வங்கி பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது. பண அட்டையை பயன்படுத்தி ஏ.ரி.எம் வலையமைப்ப்புக்கூடாக உலகின் எங்கிருந்தும் பணத்தை மீளப்பெறக்கூடிய வசதியுள்ளது. என்றபோதும் குற்றவாளிகள் ஏ.ரி.எம் அட்டை இயந்திர மோசடி மூலம் பாவனையாளர்களின் கணக்கிலிருந்து பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.

அவ்வாறான சம்பவங்களை குறைப்பதற்காக சர்வதேச கொடுப்பனவு அட்டைக்கான பாதுகாப்பை தரமுயர்த்தும் நோக்கில் விசேட முறையொன்றை மத்திய வங்கி அறிமுகம் செய்துள்ளது. இதனடிப்படையில் பண அட்டையில் இலத்திரனியல் ‘சிப்’ ஒன்றுடன் கூடிய பாதுகாப்பு EMV அட்டையை வழங்குதல் மற்றும் அனைத்து வகை இலத்திரனியல் கொடுப்பனவுகளுக்கும் குறுந்தகவல்கள் மூலம் தகவல்களை அறியத்தருதல் ஆகிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக மோசடியான முறையில் கொடுப்பனவு அட்டைகளைப் பயன்படுத்தி பணத்தை மீளப்பெறும் சம்பவங்கள் பல அறியக்கிடைத்துள்ளன. வங்கிகளும் வாடிக்கையாளர்களின் பணத்துக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தற்போது பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

எந்தவொரு கொடுக்கல் வாங்கலையும் பாதுகாப்பதற்காக வங்கியட்டை வழங்குனர் , உரிமையாளர் மற்றும் நிறைவேற்று அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் பாவனையாளர்களின் ஒத்துழைப்பும் மதிப்பீடும் அவசியம்.

டெல்லர் இயந்திர வலையமைப்பின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக பாவனையாளர்களால் EMV தொழில்நுட்பத்துடனான கொடுப்பனவு அட்டைகளை பயன்படுத்துவது அவசியமாகும். அவ்வாறான அட்டைகளை அதன் மேற் பகுதியில் காணப்படும் இலத்திரனியல் ‘சிப்’ இனைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

EMV தொழில்நுட்பம் அல்லாத அட்டைகளை வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட வங்கிகளில் EMV அட்டைகளை கேட்டு பெற்றுக் கொள்ளலாம்.

அடையாளம் காணமுடியாத பண அட்டைகள் கிடைத்தாலோ அல்லது சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றாலோ அல்லது அட்டைகள் காணமற்போனாலோ உடனடியாக குறிப்பிட்ட வங்கிக்கு அறியத்தருமாறும் மத்திய வங்கி கேட்டுள்ளது.

Related Posts