இலங்கைத் தீவில் AH1N1 இன்புளுவென்சா வைரஸ் தொற்று அபாயம் உள்ளதாக எச்சிரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவில் தற்போது கடுமையான வெப்பமான காலநிலை நிலவி வருகிறது. அதனால் AH1N1 வைரஸ் மக்கள் மத்தியில் பரவி வருவதாக தொற்று நோய் பிரிவு பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கொள்ளுமாறு பொது மக்களிடம் அவர் கோரியுள்ளார்.
மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் செல்வதனை தவிர்க்குமாறும், வெளியில் சென்று வந்தால் உடனடியாக சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், வயோதிபர்கள், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.