A32 வீதியின் போக்குவரத்து தடைப்படும் அபாயம்!

தற்போது பெய்து வரும் கடும்மழை காரணமாக, பூநகரி, மண்டைக்கல்லாறு ஏ – 32 (யாழ்ப்பாணம் – மன்னார்) வீதியை ஊடறுத்து, நீர் பாய்வதால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது, இந்தப் பகுதியூடாக 1 அடிக்கும் மேலாக நீர் பாய்கின்றது. இதனால் இப்பகுதியூடாக கனரகங்களைச் செலுத்திச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த வீதியினூடாக செல்வதற்கு பஸ்களுக்க அனுமதி வழங்கப்பட்டள்ளதாகவும் இதர சிறிய வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், நீரின் மட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டு படகுச் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய முறிகண்டி, அம்பலப்பெருமாள் மற்றும் கோட்டைகட்டி குளம் ஆகிய குளங்களில் இருந்து வெளியேறும் நீர், வன்னேரிக்குளத்தை வந்தடைந்து, அங்கிருந்து மண்டைக்கல்லாறு வழியாக ஏ -32 வீதியை ஊடறுத்தச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அம்பலப்பெருமாள் மற்றும் கோட்டைகட்டி குளம் ஆகிய குளங்கள் வான் பாயவில்லை. எனினும் வன்னேரி குளம் வான் பாய்கின்ற காரணத்தால் மண்டைக்கல்லாறு வழியாக நீர் வெளியேறியவண்ணம் உள்ளது.

தொடர்ச்சியான மழையுடன் கூடிய காலநிலை நீடிக்குமானால் மண்டைக்கல்லாறு வழியான போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Posts