8 விக்கெட்டுக்களால் சிம்பாபே அணியை வீழ்த்திய இலங்கை

சிம்பாபேவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி எட்டு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி, துடுப்பெடுத்தாட வந்த சிம்பாபே சார்பில், ஹாமில்டன் மஸகட்சா சிறப்பாக விளையாடி, 111 ஓட்டங்களைக் குவித்தார்.

இவரது அசத்தலான ஆட்டத்தின் பயனாக 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்த சிம்பாபே 310 ஓட்டங்களை விளாசியது.

இதனையடுத்து, 311 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணிக்கு, ஆரம்ப வீரர்களான நிரோசன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் அசத்தலான தொடக்கத்தை வழங்கினர்.

நீண்ட நேரம் களத்தில் இருந்து சிம்பாபே பந்து வீச்சாளர்களை களங்கடித்த இவர்கள் இருவரும் சதமடித்ததோடு, இலங்கையை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர்.

பின்னர் நிரோசன் 102 ஓட்டங்களையும் தனுஷ்க 116 ஓட்டங்களையும் பெற்ற வேளை ஆட்டமிழந்தனர்.

அடுத்ததாக, துடுப்பெடுத்தாட வந்த குஷல் மென்டிஸ் (28) மற்றும் உபுல் தரங்க (44) ஆகியோர் நிதானமாக விளையாடி வெற்றி இலக்கை எட்டினர்.

இதற்கமைய, 47.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்த இலங்கை 312 ஓட்டங்களைப் பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது.

இதன்படி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை 2-1 என முன்னிலையில் உள்ளது.

Related Posts