8 விக்கெட்டுக்களால் இலங்கை தோல்வி: தொடர் இந்தியா வசம்

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியுள்ளது.

பகலிரவு ஆட்டமாக விசாகப்பட்டனத்தில் தொடங்கிய நேற்றய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

எனவே, குணதிலக மற்றும் உபுல் தரங்க ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

எனினும், குணதிலக 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, முறுமுனையில் தரங்க அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தார்.

அவருடன் கைகார்த்த சமரவிக்ரம 42 ஒட்டங்களுடன் வௌியேற தரங்க 95 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்து சதத்தை 5 ஓட்டங்களால் தவறவிட்டார்.

அத்துடன், டிக்வெல்ல (8), மெத்தியூஸ் (17), திசர பெரேரா (6), பதிரன (7) என வரிசையாக வீரர்கள் ஆட்டமிழக்க இலங்கை அணி 44.5 ஓவர்களுக்கு மட்டுமே தாக்குப்பிடித்து 215 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப், சகால் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதேவேளை, 216 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலகுவான இலக்கு நோக்கி இந்தியா துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

கடந்த போட்டியில் இரட்டைச் சதம் அடித்து அனைவரையும் அசத்திய அணித் தலைவர் ரோகித் சர்மா இம்முறை 7 ஓட்டங்களுடன் வௌியேறி ஏமாற்றமளித்த போதும், ஷிகர் தவான் 100 ஓட்டங்களைக் குவித்தார்.

மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் 65 ஓட்டங்களை விளாச, இந்திய அணி 32.1 ஓவரில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 219 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது.

Related Posts