தற்போதைய நிலவரப்படி உலகின் மிக நீளமான திரைப்படமாக இருப்பது “மார்டன் டைம்ஸ் போரெவர்” என்கிற படம். இது 240 மணி நேரம் ஓடக்கூடியது. அதாவது தொடர்ந்து பத்து நாட்கள்.
இப்போது இந்த சாதனையை முறியடிக்கும் விதமாக ஸ்வீடனைச் சேர்ந்த இயக்குனர் ஆண்டர்ஸ் வெப்பெர்க் 720 மணிநேரம் ஓடக்கூடிய அதாவது 30 நாட்கள் தொடர்ந்து ஓடக்கூடிய படத்தை உருவாக்கி வருகிறார்.
அதற்கு “ஆம்பியன்ஸ்” என்று தலைப்பு வைத்திருக்கிறார். இந்தப் படம் 2020ம் ஆண்டு டிசம்பர் 31ந் தேதி வெளியிடப்படுகிறது.
கடந்த வாரம் இதன் டீசர் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது அதன் நீளம் மட்டும் 72 நிமிடங்கள். இந்த டீசர் வருகிற 20ந் தேதி வரை மட்டுமே ஆன்லைனில் இருக்கும். 2016ம் ஆண்டு இதன் டிரைய்லரை வெளியிட இருக்கிறார்கள். டிரைய்லர் மட்டும் 7 மணிநேரம், 20 நிமிடங்கள் இருக்குமாம்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் இப்போது பத்து பிரிவுகளாக நடந்து வருகிறது. இதுவரை 280 மணி நேரத்திற்காக படம் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. ஜெர்மனியைச் சேர்ந்த மர்சென் ஜூஹிஸ் இசை அமைக்கிறார்.
கடந்த 20 வருடங்களாக திரைப்பட இயக்குனராக இருக்கும் ஆண்டர்ஸ் வெபெர்க், ஆம்பியன்ஸ் தான் தனது கடைசி படம் என்று அறிவித்திருக்கிறார்.