நிரந்தர நியமனம் கோரி யாழ்.மாநகர சபை சுகாதார ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி நியமனம் வழங்கப்படுமென மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளரால் வழங்கப்பட்ட உறுதிமொழியைத் தொடர்ந்து கைவிடப்பட்டது.
யாழ்.மாநகரசபை சுகாதார ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் கோரி கடந்த புதன்கிழமை முதல் யாழ்.மாநகர சபை முன்றலில் போராட்டமொன்றை முன்னெடுத்து வந்தனர்.
தொடர்ந்து, திங்கட்கிழமை இவர்கள் தங்கள் போராட்டத்தினை வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்றலில் முன்னெடுத்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் ஆகியோர் சந்தித்தது கலந்துரையாடினர்.
இதன்போது, புதன்கிழமை(நாளை) 71 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படுமெனவும், அதற்கான அனுமதியினை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி கடந்த வியாழக்கிழமை (17) வங்கியுள்ளார் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.
அத்துடன், கடந்த 3 நாட்கள் விடுமுறை ஆகையினால் நியமனம் வழங்கக் கிடைத்த அனுமதி தொடர்பில் அறிவித்தலினை தெரிவிக்க முடியவில்லையெனவும் மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஊழியர்களின் போராட்டம் மதியத்துடன் முடிவுக்கு வந்தது.
யாழ்.மாநகர சபையில் 420 இற்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் வேலைப்பகுதி தொழிலாளர்கள் கடமையாற்றி வருகின்றார்கள். இவர்களில் 180 தொழிலாளர்கள் சுகாதார தொழிலாளர்களாகக் கடமையாற்றி வருவதுடன், இவர்களில் 100 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படுமென மாநகர ஆணையாளர் கடந்த ஒரிரு மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி