“ராம்குமார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை!” போலீஸ் கூறிய தகவலால் புதிய பரபரப்பு

சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு தற்போது மர்மமான முறையில் மரணமடைந்துள்ள ராம்குமாரின் வக்கீல் ராம்ராஜ், சிறை போலீஸ்காரருடன் பேசிய பேச்சில் ராம்குமார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று அந்த போலீஸ்காரர் கூறியது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறைத் தரப்பு எதையாவது மறைக்க முயல்கிறதா என்ற சந்தேகமும் இதனால் எழுந்துள்ளது. நேற்று நாலரை மணியளவில் ராம்குமார் வயரைக் கடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும், சிறை மருத்துவரிடம் காட்டிய பின்னர் ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் வழியில் ராம்குமார் இறந்து விட்டதாகவும் தகவல்கள் கூறின.

ஆனால் நேற்று மாலை 6 மணியளவில் புழல் சிறைக்குத் தொடர்பு கொண்ட ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் பேசியபோது போலீஸ்கராரர் இதை மறுத்துப் பேசியதால் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள ஆடியோவில், ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வருகிறதே என்று ராம்ராஜ் கேட்க அதற்குப் போலீஸ்காரர், அப்படியெல்லாம் இல்லை சார், ஓபிக்குக் கொண்டு போயிருக்காங்க, முடியாம என்று கூறுகிறார்.

மேலும் ராம்குமாரின் வீட்டுக்கும் இதுகுறித்து போன் செய்து இதையே கூறியதாகவும் அவர் கூறுகிறார். மேலும் டாக்டர் ஏதோ சாப்பாடு சரியில்லை (புட் பாய்ஸன்) ன்னு சொல்லிட்டிருந்தார் என்று கூறியதாகவும் கூறுகிறார் அந்த போலீஸ்காரர்.

மீண்டும் மீண்டும் ராம்ராஜ் வேறு ஒன்றும் இல்லையே என்று கேட்க, அந்த போலீஸ்காரர் வேறு ஒன்றும் இல்லை சார் என்று திருத்தமாக கூறுகிறார்.

Related Posts