ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான் இடையிலான ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மிர்புரில் நடைபெற்ற ஆட்டத்தில் அம்ஜத் ஜாவேத் தலைமையிலான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியும், அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற அமீரக அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
துவக்க வீரர்கள் ரோகன் முஸ்தபா, முகமது கலீம் ஆகியோர் தலா ஒரு ரன் மட்டும் எடுத்து வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
முகமது சமீத் 5 ரன்களும், உஸ்மான் முஸ்தாக் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 41 ரன்களுக்குள் மளமளவென 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது எமிரேட்ஸ். அதேசமயம், 4-வது வீரராக களமிறங்கிய ஷாய்மன் அன்வர் அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
குறிப்பாக அப்ரிடி, முகமது நவாஸ் ஆகியோரின் பந்தை பறக்கவிட்ட அன்வர் 41 பந்தில் 46 ரன்கள் விளாசி அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து முகமது உஸ்மான்-கேப்டன் அம்ஜத் ஜாவேத் ஜோடியும் பொறுப்புடன் விளையாடியது.
முகமது உஸ்மான் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, 20 ஓவர் முடிவில் எமிரேட்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. அஜ்மத் ஜாவேத் 27 ரன்களுடனும், முகமது நவீத் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது அமிர், முகமது இர்பான் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியும் தொடக்கத்தில் சற்று தடுமாறியது. முகமது ஹபீஸ் (11), சர்சில் கான் (4) ஜோடி பாகிஸ்தானுக்கு துவக்கம் தந்து பெரிய அளவில் ஜோபிக்கவில்லை. இருவரும் இணைந்து 15 ரன்கள் மட்டும் சேர்த்தனர். மன்சூர் ரன் எடுக்கமால் டவுட் ஆனார்.
அடுத்து வந்த சோயப் மாலிக், உமர் அக்மல் ஜோடி நிதானமாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இந்த ஜோடி 86 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தது. இறுதியில் 18.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டியது.
கடைசிவரை ஆட்டமிழக்கமால் இருந்த சோயப் மாலிக் (63), உமர் அக்மல் 50 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த ஷோயிப் மாலிக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது