எகிப்து ஏர் நிறுவனத்தின் தடம் எண்: MS804 கொண்ட ஏர்பஸ் பயணிகள் விமானம் கெய்ரோவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கிச் சென்றபோது உள்ளூர் நேரப்படி இரவு 11.09 மணியளவில் மத்திய தரைக்கடலின் மேற்பரப்பில் விமான நிலைய ரேடாரின் கண்காணிப்பு எல்லையில் இருந்து மாயமானதாக தெரியவந்தது.
அலெக்சாண்டரியாவின் மத்திய தரைகடல் பகுதியில் நடுவானில் விமானம் வெடித்து சிதறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து விமானத்தில் பயணித்தவர்களின் நிலை என்னவானது என்ற பதற்றம் எழுந்துள்ள நிலையில் சம்பவ இடத்துக்கு மீட்பு மற்றும் நிவாரணப்படை குழுவினர் அங்கு விரைந்துள்ளனர். விமானத்தின் உடைந்த பாகங்களை கண்டறிய பெரிய அளவிலான தேடுதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கராற்றெ தீவுகளுக்கு அருகில் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அந்த பாகங்கள் எகிப்து ஏர் விமானத்தின் பாகங்கள் தான் என்றும் எகிப்து பாதுகாப்புதுறை மந்திரி தெரிவித்துள்ளார்.
ரேடார் பார்வையிலிருந்து காணாமல் போயிருப்பது தொழில்நுட்ப கோளாறு என்பதை விட தீவிரவாத தாக்குதலால் ஏற்பட்டதாக இருக்கலாம் என்று எகிப்திய விமானப் போக்குவரத்து மந்திரி செரிப் பாத்தி தெரிவித்துள்ளார்.