66 குழந்தைகள் பரிதாபமாக பலியாக காரணமாக இருந்த இருமல் சிரப் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதா??

மேற்கு ஆபிரிக்க நாடான கம்பியாவில் 66 குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்துகள், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மருந்துகளை இறக்குமதி செய்யும் போது கவனமாக ஒழுங்குபடுத்தும் முகவர் நிலையங்கள் நடைமுறையில் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, குறித்த மருந்துகள் இறக்குமதி செய்யப்படவில்லை என்பது சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சுகாதார அமைச்சகம் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம், அரச மருந்துக் கூட்டுத்தாபனம் மற்றும் மருந்து விநியோகப் பிரிவு ஆகியவற்றிலும் இந்த விடயம் குறித்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளினால் பெறப்பட்ட மருந்து நன்கொடைகளும் பரிசோதிக்கப்பட்டன. எனினும் இலங்கையில் குறித்த மருந்துக்கள் கிடைக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இதற்கு முன்னதாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்துகளின் தயாரிப்புகளால் கம்பியாவில் 66 குழந்தை இறப்புகள் ஏற்பட்டதாக வெளியான தகவல் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts