65,000 வீட்டுத் திட்ட வடிவமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துக- வட மாகாண ஆளுநர்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள வடக்கு கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்க திட்டமிட்டுள்ள வீடுகளின் வடிவமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பரிந்துரை செய்துள்ளார்.

இந்தியாவின் த ஹிந்து பத்திரிக்கைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த திட்டத்தை நிறுத்த முடியாது என சுட்டிக்காட்டியுள்ள வட மாகாண ஆளுநர் பல்வேறு மாற்றங்களுடன் அதனை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து கருத்துக்களை வெளியிடாத போதிலும், முன்மொழியப்பட்டுள்ள சில வசதிகள் பயனாளிகளுக்கு தேவையற்றது என கருதுவதாக கூறியுள்ளார்.

இது குறித்து மத்திய அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தினீர்களா என த ஹிந்து பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ரொஜினோல்ட் குரே, எழுத்து மூலம் இந்த விடயத்தை அறிவித்து தனது கடமையை நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த வீட்டுத் திட்டத்தின் பிரகாரம் சமையல் எரிவாயு சிலிண்டர், சமையல் அடுப்பு, கணணி, தொலைக்காட்சி என்பன பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின் பிரகாரம் வீடொன்றை நிர்மாணிப்பதற்கு 2 தசம் 1 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் அந்த நிதியில் இரண்டு வீடுகளை அமைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு இதுவே மிகவும் சிறந்த பதில் நடவடிக்கையாக அமையும் எனவும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts