அடுத்த ஆறுமாத காலப்பகுதியில் மேலுமொரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை, மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்,
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நீண்டகாலமாக தமிழ்மக்கள் சூரிய பகவானுக்கு நன்றிசெலுத்தும் முகமாக இந்நாளை சிறப்பாக கொண்டாடிவருகின்றார்கள். இது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. மூன்று தசாப்த யுத்தம் நிறைவுக்கு வந்துள்ளது. பல துன்ப துயரங்களை கடந்து வந்திருக்கின்றோம். சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டியவர்களாகவுள்ளோம்.
எமது கடமைகளை நாம் சரியாகச் செய்யவில்லையெனக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்தையும்உரிய காலக்கிரமத்தில் படிப்படியாக வழங்கிக்கொண்டேயிருக்கின்றது.
எமது அரசாங்கம் உங்களால் தெரிவுசெய்யப்பட்டது. உங்களுக்கானதேவைகளை வழங்குவதனையே முதற்கட்ட இலக்காக கொண்டிருக்கின்றது. நாம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதன் பின்னர் வடக்கு கிழக்கில் பல காணிகளை விடுவித்துள்ளோம். அடுத்த ஆறுமாத காலத்தின் மேலுமொரு தொகுதி காணிகளை மக்களிடத்தில் கையளிப்பதற்கு தயாராவுள்ளோம்.
தற்போது சிங்கப்பூர் பொருளாதாரத்தில் முன்னிலை நாடாக உருவாகிவருகின்றது. காரணம் அந்த நாட்டை கட்டியெழுப்பவதற்கு முயன்ற பிரதமர் முதலில் பொதுமக்களுக்கு சொந்த வீடுகளை கட்டிக்கொடுத்தார். அவ்வாறிருக்கையில் எமது நாட்டிலும் எமது மக்களுக்காக வீடுகள் அமைக்கும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. தற்போது 65ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான கேள்விகோரல் செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மிகவிரைவில் அந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு கிழக்கில் குளங்களை மீளவும் திருத்தியமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம்.
அரசியல் கைதிகளை விடுவிப்பதே எமது நோக்கமாகவும் உள்ளது. பலத்த சிரமங்களுக்கு மத்தியில் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும்போது புனர்வாழ்வளிப்பது தவறானது போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுவதனால் அந்த செயற்பாடுகளை முன்னெடுப்பத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கின்றது
தற்போது இடம்பெயர்ந்த மக்கள் 32 முகாம்களில் தங்கியுள்ளார்கள். அவர்களை மீளவும் சொந்த நிலத்தில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்கவுள்ளோம். அதேநேரம் எமது அரசாங்கம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர திர்வைப் பெற்றுக்கொடுப்பதையே இலக்காக கொண்டிருக்கின்றது என்றார்.