முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் 551 பேர் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தேசிய கலந்துரையாடல் மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகரிலும், அதன் புறநகரங்களிலும் இவ்வாறு மனிதக் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவ்வாறு கடத்திச் சென்று படுகொலை செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் தன்னிடம் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பு ஸ்ரீ கதிரேசன் வீதி புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இன்றைய தினம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்;
“இலக்கத்தகடு இல்லாத வாகனங்களில் உத்தியோகபூர்வ சீருடையின்றி வந்து, தம்மை அடையாளப்படுத்தாமல் நள்ளிரவில் கதவுகளைத் தட்டி தூக்கிச்சென்றனர். இதற்கெதிராக நான் முன்வந்தபோது என்னுடன் லசந்த விக்ரமதுங்க இருந்தார். அதுகுறித்து எழுதியதினால் அவர் படுகொலை செய்யப்பட்டார். ரவிராஜ் என்னுடன் இருந்தார். அதற்கெதிராக குரல் கொடுத்தபடியினால் அவரும் கொலை செய்யப்பட்டார். கொழும்பு நகரிலும், அதனை அண்மித்த பகுதிகளிலும் 551 பேர் இவ்வாறு கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். என்னிடம் பெயர்பட்டியல் உள்ளது என்பதை கோத்தபாய ராஜபக்ஷவுக்கு கூறிவைக்க விரும்புகிறேன்” என்றார்.