எதிர்வரும் ஒரு சில தினங்களில் முதற்கட்டமாக பட்டதாரிகள் 5000 பேருக்கு புதிய நியமனங்கள் வழங்கவுள்ளதாக தொழில் மற்றும் தொழில் சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ. டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றது. இதனை கவனத்திற் கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் எதிர்வரும் சில தினங்களில் முதற் கட்டமாக 5000 பட்டதாரிகளுக்கு புதிய நியமனங்களை வழங்க தீர்மானித்துள்ளது. ஏனைய பட்டதாரிகளுக்கும் மிக விரைவில் நியமனக் கடிதங்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் அடுத்த வருடம் ஆரம்பத்திலிருந்து அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் 2,500 ரூபா சேர்க்கப்பட உள்ளது. ஏற்கனவே நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றான 10,000 ரூபாவினை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கும் திட்டத்தின் முதற் கட்டமாகவே 2,500 ரூபா அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்பட உள்ளது. எஞ்சிய தொகை 2,500 ரூபா வீதம் கட்டம் கட்டமாக அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும் எனவும் தெரிவித்தார்.
எமது நாட்டில் 17 நபர்களுக்கு ஒருவர் அரச சேவையில் சம்பளம் பெறுகின்றார். எனவே அவர்களுக்கான சம்பளமானது, நாட்டின் மொத்த வரி அறவீட்டில் இருந்து 73 சதவீதத்தையும், நாட்டின் மொத்த வருமானத்தில் இருந்து 43 சதவீதத்தையும் சேர்த்தே வழங்கப்படுகின்றது. எனவே ஒரேயடியாக 10,000 ரூபாவை அடிப்படை சம்பளத்தில் சேர்ப்பதன் விளைவாக நாட்டின் அபிவிருத்திப் போக்கு பாதிக்கப்படும். இதற்கிணங்கவே குறித்த தொகை கட்டம் கட்டமாக அடிப்படை சம்பளத்தில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு தொகையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது. எனினும் அது வழங்கப்படும் முறையிலேயே மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த வருடம் வழங்கப்பட்டுள்ள மொத்த ஓய்வூதிய தொகை 546,379 ரூபாய்களாகும். எனினும் இவ் வருடம் அந்த தொகை 560,498 ரூபாய்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20,000 ரூபாய்கள் அதிகமாகவே ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இவ்வரசாங்கம் ஓய்வூதியத்தை இடைநிறுத்தப் போவதாக கூறப்படும் கூற்றில் எவ்வித உண்மையும் இல்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற ஒரு தொகை நிதியையும், அரச ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பெறப்படுகின்ற ஒரு தொகை நிதியையும் வைத்து அமைக்கப்படுகின்ற பங்களிப்பு ஓய்வூதிய முறையினூடாகவே எதிர்வரும் காலங்களில் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 100 நாட்கள் வேலைத்திட்டம் என்பது தேசிய கொள்கைகளின் ஒரு செயற்பாடாக மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள மக்கள் பல வகையான நன்மைகளை பெற்றுக் கொண்டனர். நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களுக்கும் நாட்டுக்கும் தேவையான சகல அபிவிருத்தி திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன. அவ்வகையில் வீதி, மின்சாரம், சுகாதாரம், கல்வி என பல துறைகளை குறிப்பிட முடியுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவிவத்தார்.
அதே வேளை இன்று அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் மனித வளங்களாக பயன்படுத்தும் (Man Power) ஊழியர்களின் எதிர்காலம் குறித்தும் கவனத்தில் கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Read 22 times