500வது டெஸ்ட் : இந்தியா அபார வெற்றி!

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ind

கான்பூரில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 97 ஓவர்களில் 318 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக முரளி விஜய் 65, புஜாரா 62, ஜடேஜா 42 ரன்கள் எடுத்தனர். நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட், மிட்செல் சேன்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைச் சாய்த்தனர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து அணி 95.5 ஓவர்களில் 262 ரன்களுக்குச் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 75, டாம் லதாம் 58 ரன்கள் எடுத்தனர். இந்தியத் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 56 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 107.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 434 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து, 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 37 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்தது. ரோஞ்சி 38, சேன்ட்னர் 8 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

ஆட்டத்தின் கடைசி நாளான இன்று, ரோஞ்சியும் சேன்ட்னரும் திறமையாக இந்திய சுழல்பந்துவீச்சை எதிர்கொண்டார்கள். 120 பந்துகளில் 80 ரன்களில் எடுத்துப் போராடிய ரோஞ்சி, ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகும் நியூஸிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடித்து ஆடி இந்திய அணியைச் சிரமத்துக்கு ஆளாக்கினார்கள். அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவர் மட்டுமே தொடர்ந்து பந்துவீசியதால் கேப்டன் கோலி வேகப்பந்து வீச்சாளர்களிடம் விக்கெட்டுகளை எடுக்கும் பொறுப்பை அளித்தார். அவர் எதிர்பார்த்தபடியே ஷமி வாட்லிங்கின் விக்கெட்டை வீழ்த்தினார். பிறகு, அவருடைய அடுத்த ஓவரில் கிரேக்கை க்ளீன் போல்ட் செய்தார். இந்த இரு விக்கெட்டுகளால் நியூஸிலாந்து அணியின் டிரா திட்டத்தை முற்றிலும் முறியடித்தார் ஷமி.

5-வது நாளின் முதல் பகுதியில் நியூஸிலாந்து வீரர்கள் கடுமையாகப் போராடியும் தக்க இடைவெளியில் இந்திய அணியினர் விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இந்தியாவின் வெற்றி உறுதியானது. நியூஸிலாந்து அணி, 5-வது நாள் உணவு இடைவேளையின்போது 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது.

வெற்றி பெற இன்னும் 229 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் அடுத்தப் பகுதியைத் தொடர்ந்தது நியூஸிலாந்து அணி. பல மணி நேரமாகப் போராடிய சேன்ட்னர், 71 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவருடைய மனஉறுதி கொண்ட ஆட்டம்தான் நியூஸிலாந்தின் போராட்டத்தை வெளிப்படுத்தியது. இவருடைய விக்கெட்டைப் பறிக்க இந்திய பவுலர்கள் நீண்ட நேரம் போராடவேண்டியிருந்தது. இதன்பிறகு சோதி (18), வாக்னர் (0) ஆகியோரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியை அளித்தார் அஸ்வின்.

நியூஸிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸில் 87.3 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் இந்த டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

Related Posts