சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிறுவயதில், தான் படித்த நகரி அரசு உயர்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
‘நான் சினிமா பின்னணி பாடகராக அறிமுகமாகி 50 வருடங்கள் ஆகிறது. இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருப்பது கஷ்டம். கடவுளின் அனுக்கிரகம், ரசிகர்கள் ஆதரவு, அதிர்ஷ்டம் போன்றவற்றால் இன்னும் நான் பாடகராக நீடிக்கிறேன். சிறு வயதிலேயே பாடுவதில் எனக்கு இஷ்டம். பள்ளிக்கூடத்தில் கடவுள் வாழ்த்து, ஜனகனமன பாடுவதற்கெல்லாம் என்னைத்தான் அழைப்பார்கள். சினிமாவில் முதன்முதலாக எம்.ஜி.ஆர் படத்தில் ‘‘ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா’’ என்ற பாடலை பாட வாய்ப்பு கிடைத்தது.
எம்.ஜி.ஆர். பெரிய நடிகர். அவர் படத்தில் பாடுவது எனக்கு பயமாக இருந்தது. அதோடு டி.எம்.சவுந்தரராஜன் பெயரை சொல்லி நண்பர்களும் என்னை பயமுறுத்தினார்கள். அப்போது எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் உச்சத்தில் இருந்தனர். இருவருக்கும் இடையே போட்டியும் நிலவியது. அவர்கள் படங்களில் எல்லா பாடல்களையும் டி.எம்.சவுந்தரராஜன்தான் பாடி வந்தார். இருவர் குரலுக்கேற்ற மாதிரி வித்தியாசமாக பாடுவதில் டி.எம்.சவுந்தரராஜன் வல்லவர். சிவாஜி கணேசன் குரல் மாதிரியே அவரது படங்களில் பாடுவார்.
எம்.ஜி.ஆர் படங்களில் அவர் பாடுவது மாதிரியே வேறு குரலில் பாடுவார். எனவே டி.எம்.சவுந்தரராஜனிடம் என்னால் தாக்குப்பிடிக்க முடியாது என்று பயமுறுத்தினர். ஆனால் ‘ஆயிரம் நிலவே’ பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து பாடும் வாய்ப்புகளும் வந்தன. நான் பாடியதில் எனக்கு மிகவும் பிடித்தது ‘‘கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்’’ என்ற பாடல். ஒரு இளைஞன் பெண்ணை கேலி செய்வது போலவும் அழகை வர்ணிப்பது போலவும் அந்த பாடல் இருந்தது.
கமல்ஹாசன் படத்தில் அது இடம்பெற்றது. இதற்காக கமல்ஹாசன் குரலில் பாடினேன். பாடலை கமல்ஹாசன் கேட்டுவிட்டு பாடலிலேயே நடிப்பு உணர்ச்சிகளை வெளிப்படுத்தி விட்டீர்கள். இதனால் எனக்கு இந்த பாடலில் நடிப்பது சுலபமாக இருந்தது என்று பாராட்டினார். எனது குரல் இப்போதும் இளமையாக இருக்கிறது என்கின்றனர். அது கடவுளின் அருள். கடைசி மூச்சு உள்ளவரை பாடிக்கொண்டே இருப்பேன்.
எனக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் இங்கு வந்துள்ளனர். மாணவர்களை சிறந்தவர்களாக உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்தான். எனவே அவர்களை கெட்டவர்கள் போல் சித்தரித்து படங்கள் எடுக்க கூடாது என்று டைரக்டர்கள் மற்றும் நடிகர்களை கேட்டுக்கொள்கிறேன். ஆசிரியர்களை தவறாக காட்டினால் மாணவர்கள் அவர்களை மதிக்க மாட்டார்கள். இதன்மூலம் ஆசிரியர்கள்-மாணவர்களின் நல்ல உறவு கெட்டுப்போகும்.
இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசினார்.