எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு இலங்கை போக்குவரத்துச் சபையில் எவருக்கும் தொழில் வழங்க முடியாது என போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
காத்தான்குடியிலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போவுக்கு விஜயம் செய்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,
தேவைக்கு அதிகமான மேலதிக ஊழியர்கள் இலங்கை போக்குவரத்துச் சபையில் கடமையாற்றுகின்றனர். இதனால் எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்கு இலங்கை போக்குவரத்துச் சபையில் எவருக்கும் தொழில் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு பாரிய கடன் நிலுவை உள்ளது. இந்த சபையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றுக்கு பத்து பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது.
வேறு கடனாக மூன்று பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது. ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றை செலுத்த தவறும் பட்சத்தில் அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்வார்கள்.
இதனால் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு தொழில் வழங்குவதை நிறுத்தி கடனை செலுத்தி முடிக்க வேண்டும். ஒரு பஸ் வண்டிக்கு ஆறு ஊழியர்கள் என்ற விகிதத்தில் ஊழியர்கள் கடமையாற்றுகின்றனர்.
மேலதிகமாக காணப்படும் ஊழியர்களை ஊழியர்கள் தேவைப்படும் இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கை போக்குவரத்துச் சபை தனியார் போக்குவரத்துடன் போட்டி போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபையை முன்னேற்ற வேண்டுமானால் இதில் கடமையாற்றும் ஊழியர்களாகிய நீங்கள் என்னுடன் ஒத்துழைக்க வேண்டும். நிலுவைப் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும்.
பஸ்வண்டிகளின் சாரதிகள் காப்பாளர்களை குறைத்து தேவையான இடத்திற்கு அவர்களை மாற்ற வேண்டும். தொழிற் சங்க போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதன் மூலம் திறைசேரியிலிருந்து பணத்தை பெறமுடியாது.
சிறந்த நிருவாகத்தின் மூலம் தான் இந்த குறைகளை நிவர்த்தி செய்து இதன் உற்பத்தி திறனை வளர்த்து இந்தச் சபையை முன்னேற்ற முடியும்.
மட்டக்களப்பில் காணப்படும் உள்ளுர் விமான நிலையம் பத்து பில்லியன் ரூபா நிதி செலவு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு 45 நிமிடங்களில் கொழும்பிலிருந்து விமானத்தில் மட்டக்களப்புக்கு வரும் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.