குத்தகை நிறுவனங்கள் மற்றும் தவணைக கட்டண அடிப்படையில் பொருட்களை வழங்கும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், கட்டணங்களை வசூலிப்பதற்காக மாலை 5 மணிக்குப் பிறகு வீட்டுக்கு வந்தால், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடமாகாணத்திலுள்ள நிதி நிறுவனங்கள், மாலை 5 மணிக்கு பின்னர் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று நிதி சேகரிப்பதை தடை செய்யவேண்டும் என்ற வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, மத்திய வங்கி ஆளுநர் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி அமுல்படுத்தினார்.
இது தொடர்பில் வடமாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களில் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது அந்நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் மாலை 5 மணிக்குப் பின்னர் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் வடமாகாண அவைத்தலைவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது,
‘மேற்படி தீர்மானம் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஆளுனர் அதனை அமுல்படுத்தியும் இருந்தார். மேலும் இது தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறிச் செயற்படும் நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யலாம். பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள்’ என்றார்.