பின்தங்கிய பிரதேசங்களில் கடமையாற்றாத ஆசிரியர்கள் இரண்டு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுவரும் நிலையில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களை பின்தங்கிய பிரதேசங்களுக்கு அனுப்பப்போவதில்லை என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.
இது தொடர்பில் வட மாகாணக் கல்வி அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
வடமாகாணக் கல்வி அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்களின் தட்டுப்பாடு நிலவுகின்றன. ஆனால் யாழ். மாவட்டத்தில் மேற்படி பாட ஆசிரியர்கள் அதிகமாக இருக்கின்றார்கள். இதனால் யாழ்ப்பாண ஆசிரியர்களை கிளிநொச்சிக்கு அனுப்புவதற்குத் தீர்மானித்துள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, கல்வியற் கல்லூரியிலிருந்து அடுத்த மாதம் வெளியேறவுள்ள ஆசிரியர்களை வன்னிப் பிரதேச பாடசாலைகளுக்கு உள்வாங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
அத்துடன், ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட 509பேர் யாழ். தேசிய கல்வியற் கல்லூரிக்கு வருகை தரவுள்ளார்கள். அவர்களையும் விசேட அனுமதியின் அடிப்படையில் உள்வாங்க இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.