யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் வெறும் மாயையாகும் என்று காணாமல் போனோர் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
காணாமல் போனோர் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் எப்போது நடைபெறும் என பலர் எம்மிடம் வினவுகின்றனர். ஆனால் அடுத்த கட்ட அமர்வுகளை நடத்துவதற்கான ஜனாதிபதி செயலகத்தின் அனுமதி கிடைக்கும் வரை நாங்கள் காத்திருக்கின்றோம் என்பதை அறிவிக்கின்றோம்.
நாங்கள் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடத்திய அமர்வுகளின் போது பலர் எமது விசாரணை அமர்வுகளை புறக்கணித்ததாக செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால் இந்த அமர்வுகளின் போது எங்களுக்கு 300 புதிய முறைப்பாடுகள் கிடைத்தன என்பதை தெரிவிக்கின்றோம்.
எமது ஆணைக்குழுவுக்கு இரண்டு ஆணையாளர்கள் மேலதிகமாக இணைக்கப்பட்டனர். இப்போது எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள அனைத்து முறைப்பாடுகளுக்கும் நாங்கள் அடுத்த 12 மாதங்களில் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என்பது எமது நம்பிக்கையாகும்.
இதேவேளை ஜனாதிபதி அண்மையில் வழங்கியுள்ள ஒரு நேர்காணலில் அவர் பொறுப்புக்கூறல் செயற்பாடானது உள்நாட்டை மையப்படுத்தியதாக அமையும் என்று கூறியிருந்தார். ஆனால் எமது பரணகம அறிக்கையில் நாங்கள் வெளிநாட்டு தொழில்நுட்ப உதவியைப் பெற்றுக்கொள்ள பரிந்துரை செய்திருந்தோம்.
பொருத்தமான பொறிமுறையை தெரிவு செய்வது அரசாங்கத்தை சார்ந்ததாகும். ஆனால் வெளிநாட்டு நீதிபதிகளை இணைத்துக் கொள்ளுமாறு நாம் எங்கும் கூறவில்லை. கடந்த 26 ஆம் திகதி சனல்-4 தொலைக்காட்சி நிறுவனம் ஒரு புதிய காணொளியை வெளியிட்டிருந்தது. அதில் 40 ஆயிரம் பேர் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்டிருக்கலாம் என ஐ.நா.வை மேற்கோள்காட்டி கூறப்பட்டது.
ஆனால் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரம் சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் வெறும் மாயையாகும். பரணகம ஆணைக்குழுவின் இரண்டாவது ஆணைக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட அறிக்கை இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறும் என்பதை தெரிவிக்கிறோம்.
அரசாங்கம் யுத்தகாலத்தில் யுத்த சூனிய வலையத்தை பிரகடனப்படுத்தியிருந்தாலும், அதற்கு புலிகள் அமைப்பு ஒருபோதும் இணங்கவில்லை. எனவே சர்வதேச மனிதாபிமான சட்ட விவகாரம் இங்கு பொருத்தமாக அமையாது.
எவ்வாறெனினும் எமது ஆணைக்குழுவானது நீதிக்கான உரிமை, உண்மை, நட்டஈடுவழங்குதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் செயற்படும். அதுமட்டுமன்றி எமது விசாரணை ஆணையாளர்களைக் கொண்டு காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை அவர்களின் குடும்பத்தினருக்கு கூறுவதற்கு எமது ஆணைக்குழு பொறுப்பேற்கின்றது.