4 மாணவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவர்: கோட்டாபய

வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைகழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களின் விடுதலை தொடர்பில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரியரட்னம் தலைமையிலான குழுவினர் கலந்துக்கொண்டனர்.

வெலிகந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழகத்தை சேர்ந்த நான்கு மாணவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர்களிடம் சில விடயங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு குறுகிய கால புனர்வாழ்வு அளிப்பதற்காகவே குறித்த புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மாவீரர் தினத்தன்றும் அதற்கு மறுதினமும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களை அடுத்து பல்கலைகழகத்தைச் சேர்ந்த 11 மாணவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 7 பேர் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க விடுவிக்கப்பட்டனர்.

ஏனைய நால்வருமே வெலிக்கந்தை முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்துக்கு அருகில் அமைந்துள்ள டெலோ அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு சுவரொட்டிகளை ஒட்டினார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts