4 இலட்சத்திற்கு மேற்பட்ட இளம் தலைமுறையினர் போதைப்பொருளுக்கு அடிமை!!

ஐஸ் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதன் பாவனை நாட்டின் பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளது. நான்கரை இலட்சம் இளம் தலைமுறையினர் அபாயகரமான முறையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள்.

ஐஸ் ரக போதைப்பொருள் பாவனைக்கு முழுமையாக அடிமையானவர்களின் ஆயுட்காலம் இரண்டரை வருடகாலமாக வரையறுக்கப்படும் என சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டின்போது விசேட உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

ஹெரோயின், அபின் உள்ளிட்ட அபாயகரமான போதைப்பொருள் பாவனையை காட்டிலும் நாட்டில் தற்போது ஐஸ் ரக போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் சடுதியாக தீவிரமடைந்துள்ளது.

ஐஸ் ரக போதைப்பொருள் பாவனைக்கு பாடசாலை மாணவர்களில் பெரும்பாலானோர் அடிமையாகியுள்ளார்கள்.

மாணவர்களில் பெண்பிள்ளைகளும் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளமை அவதானத்துக்குரியது.

ஐஸ் ரக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாளர்களின் மூளை பாதிக்கப்படுகிறது. உடல் ரீதியில் குறுகிய காலத்துக்குள் பலவீனமடைகிறார்கள்.

ஐஸ் போதைப்பொருளுக்கு முழுமையாக அடிமையானவர்களின் ஆயுட்காலம் இரண்டரை வருடங்களாக வரையறுக்கப்படும் என சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ளார்கள்.

போதைப்பொருள் ஒழிப்புக்கு தேவையான சட்டம் காணப்பட்டாலும், சட்டத்தை செயற்படுத்தும் ஒருசில தரப்பினரது முறையற்ற செயற்பாடுகளினால் போதைப்பொருள் சமூக கட்டமைப்பில் சுழற்சி முறையில் காணப்படுகிறது.

ஒரு சிலரின் குறைபாடுகளினால் கைப்பற்றப்படும் போதைப்பொருள் மீண்டும் சமூகமயப்படுத்தப்படுகிறது.

ஆகவே, கைப்பற்றப்படும் போதைப்பொருள்களில் ஒரு தொகையை நீதிமன்ற செயற்பாடுகளுக்கு மாதிரியாக எடுத்துக்கொண்டு மிகுதியான போதைப்பொருள்களை பொறுப்பான தரப்பினரது முன்னிலையில் அழிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனை அல்லது போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்படும் 18 வயதுக்கு குறைந்தவர்களை சிறைச்சாலைக்கு அனுப்பாமல், அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படுகிறது.

நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் எவரையும் புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்ப முடியாது.

ஒருவர் தனது விருப்பத்தின் அடிப்படையில் புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு செல்லும் வகையில் நடைமுறையில் உள்ள சட்டத்தை திருத்தம் செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் கடுமையான சட்டம் நடைமுறையில் காணப்படுகிறது.

2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கைவசம் வைத்திருந்தது உறுதிசெய்யப்பட்டால், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும்.

தற்போது 2 கிராம் முதல் 5 கிராம் வரையான ஹெரோயின் போதைப்பொருளை தன்வசம் வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தை திருத்தம் செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் நான்கரை இலட்சம் பேர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள்.

போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் நாட்டு மக்கள் தகவல் வழங்குவதில்லை; பொலிஸாருக்கு தகவல் வழங்கும்போது அதன் இரகசியம் பாதுகாக்கப்படாது; அதனால் தமது உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என மக்கள் கருதுகிறார்கள்.

ஒருசில பாடசாலைகளில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்குள் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் தகவல் வழங்குவதில்லை. விடயத்தை வெளிப்படுத்தினால், தமது பாடசாலையின் கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்படும் என கருதுகிறார்கள்.

ஒருசில விடயங்களை முன்னிலைப்படுத்தி, இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை இல்லாதொழிக்க முடியாது.

போதைப்பொருள் ஒழிப்புக்கு நாடளாவிய ரீதியில் விசேட செயலணியை ஸ்தாபிக்க பேச்சுவார்த்தை எடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவனை பாரதூரமாக தீவிரமடைந்துள்ளது.

நாம் அரசியலை பற்றி பேசுகிறோம். ஆனால், நாடு பொருளாதார பாதிப்புக்கு அப்பாற்பட்ட வகையில் மிக மோசமான நிலைக்குச் செல்வது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Related Posts