35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரம்

முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கான தேசிய கொள்கை ஒன்றை வகுப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பில் முச்சக்கர வண்டி சங்கங்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று நேற்று கொழும்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடத்தப்பட்டது.

இதன்போது 09 தலைப்புக்களின் கீழ் பேசப்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினால் பல யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போது நாட்டில் சுமார் 12 இலட்சம் முச்சக்கர வண்டிகள் காணப்படுவதாகவும், எதிர்காலத்தில் முச்சக்கர வண்டிகள் இறக்குமதி செய்வதை வரையறுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இங்கு கூறியுள்ளார்.

அத்துடன் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கான அனுமதிப் பத்திரம் வழங்கும் வயதெல்லையை 35 ஆக அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தினங்களில் இந்த சட்ட திட்டங்களை பாராளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றிக் கொண்டதன் பின்னர் சட்ட வரைவு திணைக்களத்திற்கு சமர்பிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் பயணிகளினதும் சாரதிகளினதும் பாதுகாப்பு கருதியே இந்த தேசிய கொள்கையை வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் கூறினார்.

Related Posts