முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்புப்பகுதியில் உள்ள குருந்தூர் மலையில் அமைந்திருக்கும் வைரவர் ஆலயத்தில் 33 வருடங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் சனிக்கிழமை (29.08.2015) வழிபாடு இடம்பெற்றுள்ளது. ஊரவர்களால் ‘ஜயன்’ என்று அழைக்கப்படும் இந்த வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற இவ்விசேட மடைப்பொங்கல் நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் க. சிவநேசன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
குருந்தூர் மலையில் தமிழ் மன்னர்களின் ஆட்சியை அடையாளப்படுத்தும் வரலாற்று ஆதாரங்களாகத் தொல்லியற் சின்னங்கள் இன்றளவும் காணப்படுகின்றன. இந்த அடையாளங்களைச் சிங்கள, பௌத்த அடையாளங்களாகச் சித்திரித்து குருந்தூர் மலையில் பௌத்த விகாரை ஒன்றை அமைக்கும் முயற்சி 1980களின் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக குருந்தூர் மலையில் பௌத்த பிக்கு ஒருவரும் வந்து தங்கியிருந்தார். எனினும், விடுதலைப் போராட்ட அமைப்புகளினதும் பொதுமக்களினதும் தீவிர எதிர்ப்பால் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டது.
தொடர்ந்து வந்த இடப்பெயர்வுகளாலும், குருந்தூர் மலையில் இராணுவம் தங்கியிருந்தமையாலும் மலை உச்சியில் அமைந்துள்ள ஜயன் ஆலயத்துக்குப் பொதுமக்களால் சென்றுவர முடியவில்லை. போர் முடிந்து பல வருடங்களைக் கடந்து விட்டபோதும் இப்போதும் மலையில், இராணுவத்தின் காவலரண் காணப்படுகிறது.
தண்ணிமுறிப்பில் இருந்து இடம்பெயர்ந்து மடு மற்றும் தண்ணீரூற்றுப் பகுதியில் வாழும் மக்கள் தங்கள் சொந்த ஊரில் உள்ள குருந்தூர் மலை வைரவர் ஆலயத்துக்குச் செல்லமுடியாதிருப்பதைத் தங்கள் வாழ்நாளின் பெருந்துயராகவே கருதி வருகின்றனர். அதைப் போக்கும் விதமாகவே, பாதுகாப்புக் காரணங்களுக்காக அமைச்சர் பொ. ஐங்கரநேசன் மற்றும் மாகாணசபை சபை உறுப்பினர் க. சிவநேசன் ஆகியோரையும் வரவழைத்துச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
குருந்தூர் மலை முற்றுமுழுதாக மரங்களால் மூடப்பட்டு ஒரு வனப் பகுதியாகக் காணப்படுகிறது. இதனால், மலையில் ஏறிச்செல்வதிலும் ஆலயம் அமைந்துள்ள இடத்தை அடையாளம் காண்பதிலும் வழிபாட்டுக் குழுவினர் சிரமங்களை எதிர்கொண்டிருந்தபோதும், மிகவும் பக்தி பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் வழிபாட்டை மேற்கொண்டு திரும்பியுள்ளனர்.
வழிபாட்டின் முடிவில், தண்ணிமுறிப்பில் இருந்து இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் மீளவும் அவர்களது சொந்த நிலத்தில் குடியேறவும், விவசாயத்தை மேற்கொள்ளவும், ஆலயத்துக்குத் தொடர்ச்சியாகச் சென்றுவருவதற்கும் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் கோரி அமைச்சர் பொ. ஐங்கரநேசனிடம் மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.