வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் செயலணிக்குழுவினருக்கும் வடமாகாண சபைச் செயலணிக் குழுவினருக்குமிடையே நேற்றயதினம் காலை 11.00 மணிக்கு வடமாகாண சபையில் கலந்துரையாடல் இடம் பெற்றது.
இது தொடர்பில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது சார்பில் 15 உறுப்பினர்களும் வடமாகாண செயலணிக்குழுவில் வடமாகாண அவைத்தலைவர், வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர், மாகாணசபை உறுப்பினர்களான சர்வேஸ்வரன், சுகிர்தன், அஸ்மின் ஆகியோரும் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ரூபினி வரதலிங்கமும் கலந்துகொண்டனர்.
இதில் 31.03.2012 ற்கு முன்னர் பட்டம் பெற்றவர்களுக்கான நியமனம் தொடர்பாக அஸ்மின் கருத்துரைக்கும் போது, 31.03.2012 ற்கு முன்னர் பட்டம் பெற்ற யாழ்.மாவட்டப் பட்டதாரிகளுக்கான நேர்முகத்தேர்வு இம்மாதம் 08,09,10 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறும் எனவும் ஏனையவர்களுக்கான நேர்முகத்தேர்வு தொடர்ச்சியான திகதிகளில் நடைபெறும் எனவும் கூறினார்.
31.03.2012 ற்கு முன்னர் பட்டம் பெற்றவர்களுள் தவறவிடப்பட்டோர் தொடர்பாக எம்மால் கருத்துத்தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கான நியாயத்தினைப் பெற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க, யாழ்.மாவட்டச்செயலகத்திலுள்ள அவ்வாறு விடப்பட்டவர்களது பட்டியலை உடனடியாகப் பெற்று ஆவன செய்வதாக உறுதியளிக்கப்பட்டது.
வருகின்ற 07.10.2015 ஆம் திகதி வடமாகாணத்திலுள்ள தமிழ்மொழி மூலப் பாடசாலைகளுக்கான 111 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பம் கோரப்படவிருப்பதாக வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ரூபினி வரதலிங்கம் கூறினார்.
முகாமைத்துவ சேவைப் பிரிவின் அனுமதிக்காக அனுப்பட்ட ஆளணியிருக்கான அனுமதி தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை வடமாகாண பிரதம செயலாளர் நேரடியாகச்சென்று உரையாடியதாகக் கூறப்பட்ட போதும் ஆக்கபூர்வமான பதில் வழங்கப்பட்டிருக்கவில்லை.
முகாமைத்துவ சேவைப் பிரிவின் அனுமதிக்காக அனுப்பட்ட ஆளணியிருக்கான அனுமதி தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனிடம் நாளைக்கிடையில் கடிதம் வழங்குவதாக வடமாகாண அவைத்தலைவர் கூறினார். இதன் மூலம் அரசியல் ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அனுமதி பெறுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தலாம் என்றார்.
குறிப்பு:- யாழ். மாவட்ட செயலகத்தில் இதுவரை பதிவு செய்யாத 31.03.2012 ற்கு முன்னர் பட்டம் பெற்ற வேலை யற்ற பட்டதாரிகள் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ரூபினி வரதலிங்கத்திடம் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.