இந்தியா திருவனந்தபுரத்தில் இருந்து சென்ற எமிரேட்சின் போயிங் ஆ.கே.521 ரக விமானம் துபாயில் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 300 பேரை பத்திரமாக மீட்க உதவிய தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முகமது வீரமரணம் அடைந்தார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்சின் போயிங் ஈ.கே.521 ரக விமானம் 282 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை 10.19 மணிக்கு புறப்பட்டது. சுமார் 4 மணி நேர பயணத்தில் அமீரக நேரப்படி மதியம் 12.50 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 2.20 மணி) துபாயில் தரை இறங்க திட்டமிடப்பட்டு இருந்தது.
அமீரகத்தின் எல்லைப்பகுதியை விமானம் நெருங்கிக்கொண்டிருந்தபோது விமானத்தின் முன்சக்கரம் திறக்கும் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதை உணர்ந்த விமானிகள் உடனடியாக விமானத்தை தரையிறக்க திட்டமிட்டார்கள்.
இதைத் தொடர்ந்து துபாய் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. துபாயில் இருந்து புறப்படும் விமானங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. விமான நிலையம் மற்றும் ஓடு பாதைக்கு தீயணைப்பு மற்றும் ஆம்புலன்சுகள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், விமானத்தை விமானிகள் சாதுர்யமாக இயக்கி, விமான நிலையத்தை நெருங்கியபோது, விமானத்தின் முன்பகுதி சக்கரம் தீப்பற்றி எரிவதை ஓடுதளத்தில் இருந்த மீட்புப் படையினர் அறிந்தனர். ஓடுதளத்தில் விமானம் தரை இறங்கியபோது, விமானத்தின் பின் பக்க சக்கரங்கள் தரையை முதலில் தொட்டன.
இதையடுத்து விமானத்தின் வேகம் உடனடியாக குறைக்கப்பட்டு முன் சக்கரத்தை இயக்க விமானிகள் முற்பட்டபோது அதனை கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியவில்லை. இதையடுத்து பலத்த சத்தத்துடன் விமானத்தின் முன் பகுதி தரையில் மோதி வெடித்தது.
இதனால் விமானம் வேகமாக தீப்பிடித்தது. இதையடுத்து தயார் நிலையில் இருந்த மீட்பு குழுவினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் உள்ளிட்ட 300 பேரையும் அவசரகால வழிகள் மூலம் உயிருடன் மீட்டனர்.
இந்த விபத்தில் 10 பேர் மூச்சு திணறல் மற்றும் தீ காயத்தால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் வீடு திரும்பினார்கள். படுகாயம் அடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் சாதுர்யமாக விரைந்து செயல்பட்டு விமானத்தில் இருந்த 300 பேரை மீட்ட தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முகமது வீரமரணம் அடைந்துள்ளார். இதனை எமிரேட்ஸ் விமான நிறுவன தலைவர் ஷேக் அஹ்மத் பின் சயீத் அல்-தயார் உறுதி செய்துள்ளதாக சின்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணிகளை மீட்கும் போது படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பிற தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பயணிகளை காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு உயரிழந்த தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முகமதுக்கு துபாய் விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
எமிரேட்ஸ் விமான விபத்துக்கான காரணம் குறித்து ஷேக் அஹ்மத்திடம் கேட்டபோது, திட்டமிட்டபடி விமானத்தில் தேவையான அனைத்து பராமரிப்பு மற்றும் பாதுகாப்புகள் குறித்து விசாரணைகள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து விசாரணைகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.