30 வீத ஆரம்பக் கொடுப்பனவு கட்டாயம் பெறப்பட வேண்டும் : லீசிங் நிறுவனங்களுக்கு மத்திய வங்கி நிபந்தனை

வாகனங்களைக் குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்யும் நடவடிக்கைக்கு இலங்கை மத்திய வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதன்படி வாகனங்களை முழுமையான குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நிதிச்சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானமொன்றுக்கு அமைய, லீசிங் வசதிகளை வழங்கும் நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய புதிய நடைமுறைகளை உள்ளடக்கிய சுற்றுநிருபமொன்று இலங்கை மத்திய வங்கியினால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த சுற்றுநிருபத்தின் பிரகாரம், வாகனத்தின் பெறுமதியில் 70 சதவீதத்திற்கு மாத்திரமே குத்தகை வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கட்டுப்பாடு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்தச் சுற்று நிருபத்தின் பிரகாரம், நிதி நிறுவனங்கள் ஆரம்ப வைப்புத் தொகை இல்லாது வாகனக் கொள்வனவுக்காக வழங்கிய முழு லீசிங் வசதியை, இனி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், வாகனங்களைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் 30 வீத ஆரம்பக் கொடுப்பனவைக் கட்டாயமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் இந்த தீர்மானத்தினால், இலங்கையின் வாகனக் கொள்வனவு குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிங்சிகே தெரிவித்துள்ளார்.

Related Posts