30 வருடங்களின் பின்னர் இரணைமடு குளத்திலிருந்து நீர், குடியிருப்பு பகுதிகள் நோக்கி நேற்று (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டது.
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் ஏற்று நீர்பாசண திட்டம் யுத்தத்தினால் முழுமையாக சேதமடைந்திருந்த நிலையில் அதன் புனரமைப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இரணைமடு குளத்தின் அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட நிதியில் குறித்த ஏற்று நீர்பாசண திட்டமும் உள்ளடங்குகின்றது.
யுத்தம் காரணமாக கைவிடப்பட்ட ஏற்று நீர்பாசண விவசாய செய்கை அடுத்த வருடம் முதல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2 வருடங்களிற்கு மேலாக இரணைமடு குளத்தின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஏற்று நீர்பாசண திட்டத்தின் பணிகளும் 80 வீதம் பூர்த்தியாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் குறித்த திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நீர்பாசண வாய்க்கால்களை சோதனையிடுவதற்காகவும், புதிதாக பொருத்தப்பட்ட நீரப்பிகளின் இயங்கு நிலையை அவதானிப்பதற்காகவும் நேற்று நீர்பாசணம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சோதனைக்காக வாய்க்கால் வழியு அனுப்பட்ட நீரை திருவையாடு பகுதி மக்கள் ஆவலுடன் பார்வையிட்டதுடன் மகிழ்ச்சி வெளியிட்டனர்.
30 வருடங்களின் பின்னர் இரணைமடு குளத்திலிருந்து நீர் குடியிருப்பு பகுதிகள் நோக்கி சென்றமை தொடர்பில் திருவையாறு ஏற்று நீர்பாசண விவசாயிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.