அரசியல் கைதிகள் ஆறாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்வதனால் கைதிகளில் முப்பது பேருக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக பாதிப்பு எரோபட்டுள்ளது. இதனால் அவர்கள் பெரிதும் அவதியுற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவகல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு சிறுநீரக பாதிப்புக்கு உள்ளான கைதிகளை வலுக்கட்டாயமாக வைத்திய சாலைகளில் சேர்ப்பதற்கு சிறை அதிகாரிகள் முயன்றதனாலும் கைதிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தமையாலும், கைதிகளுக்கும் போராட்டகாரர்களுக்குமிடையில் முறுகல் நிலை காணப்படுவதாகவும் அறிய முடிகின்றது.
எவ்வித விசாரணைகளுமின்றி பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யக்கோரி கடந்த பல வருடங்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களது போராட்டம் நாட்டில் புதிய அரசு ஆட்சி பொறுப்பேற்றவுடன் முன்னைய காலங்களிலும் பார்க்க முனைப்பு பெற்றிருந்தது.
கடந்த மாதம் நிபந்தனையற்ற தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இப்போராட்டம் அரசின் வாய்மொழி உறுதிகளினால் ஐந்தாவது நாளான்று கைவிடப்பட்டது. தாம் எமாற்றப்பட்டதனை உணந்த கைதிகள் மீண்டும் தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வரும் கைதிகளில் பலர் நீர் ஆகாரம் அருந்தாமலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உடலில் நீர்த்தன்மை இல்லாமல் போய் சிறுநீரகம் பாதிப்புற்றுள்ளதாக நேற்றைய தினம் கைதிகளை சிறையில் சென்று பார்வையிட்ட சட்ட வைத்திய அதிகாரி மூலமாக அறிய முடிகின்றது.
சிறையில் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதனாலும், சுகயீனமுற்ற கைதிகள் மருத்துவ உதவிகளை மறுத்து வருவதனாலும், சிறை அதிகாரிகள் உன்னாவிரத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களை மருத்துவமனைகளில் சேர்ப்பிப்பதற்கு கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். கைதிகளை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லும் முயற்சிகளும் மகசின் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் கைதிகளுக்கும் சிறைச்சாலை பாதுகாவலர்களுக்கும் இடையில் நேற்றைய தினம் முறுகல் நிலை கானப்பட்டிருந்தது. சிறிது நேரம் அங்கு பதற்ற நிலை காணப்பட்டதாகவும் நேற்றைய தினம் அங்கு சென்று கைதிகளை பார்வையிட்ட சட்டத்தரணிகளில் ஒருவர் கூறுகின்றார்.