3 நாள் ஓடினாலே சக்சஸ் என்கிறார்களே! – ஒய்.ஜி.மகேந்திரன்

ஆகம் என்ற படத்தில் எனக்கு சிறிய ரோல்தான். என்றாலும் ஒரு நல்ல படத்தில் நாட்டுக்குத்தேவையான கருத்தை சொல்லும் படத்தில் நடித்தது எனக்கு பெரிய சந்தோசத்தைக் கொடுத்துள்ளது என்கிறார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன்.

y-g-makentheran

அதுபற்றி அவர் மேலும் கூறுகையில்,

இந்த ஆகம் படக்கதையை நான் கேட்டபோது எனது நினைவுகள் 35 வருடத்துக்கு பின்னாடி சென்றது. அப்போது இந்த பட டைரக்டர் ஸ்ரீராமை மாதிரி பெரிதாக சினிமா அனுபவம் இல்லாத ஒரு டீம் என்னிடம் ஒரு கதை சொல்லி அதை படமாக எடுத்தனர். அது பெரிய சக்சஸ் ஆனது. அந்த படத்தின் பெயர் உச்சக்கட்டம். ராஜ்பரத் இயக்கினார். லெதர் இண்டர்ஸ்ட்ரியில் இருந்து வந்து ஒரு சஸ்பென்ஸ் படத்தை கொடுத்து தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கினார்கள்.

அதேமாதிரி இந்த ஆகம் படத்தோட கதையை இயக்குனர் ஸ்ரீராம் என்னிடம் சொன்னபோது எனக்கு உச்சக்கட்டம் படத்தோட பீல் கிடைத்தது. ஒரு நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். நம்ம நாட்டை இப்படியெல்லாம் கொண்டு போக வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அது சம்பந்தமாக எவ்வளவு ஆக்சன் எடுக்கிறோம் என்பது தெரியவில்லை. ஆனால் இந்த படம் நம்ம நாட்டோட பெருமையை நம்ம நாட்டில் இல்லாதது எதுவும் இல்லை. குறிப்பாக பாரின் மோகத்தை இந்த படம் குறைக்கும்.

இந்த டைரக்டருக்கு சினிமா அனுபவமே கிடையாது என்றாலும் இந்த கதையை ரொம்ப அழகாக என்னிடம் சொன்னார். எப்போதுமே நல்ல விசயத்தைக்கொடுத்தால் ஏற்றுக்கொள்ளும் நம்ம ரசிகர்கள் இந்த படத்துக்கு பெரிய ஆதரவு கொடுப்பார்கள். இந்த மாதிரி நாட்டுக்குத் தேவையான ஒரு கதையில் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. மருந்தில் சர்க்கரை கலந்து கொடுப்பது போன்று இந்த கதையை ஜனரஞ்சகமாக கொடுத்துள்ளார் இயக்குனர்.

இவ்வாறு கூறிய ஒய்.ஜி.மகேந்திரன், நாங்களெல்லாம் நடித்த காலத்தில் படங்கள் 100 நாட்கள் ஓடிய நிலை இருந்தது. ஆனால் இப்போது 3 நாள் ஓடினாலே சக்சஸ் என்கிறார்கள். அது எனக்கு புரியவில்லை. ஆனால் இந்த ஆகம் படம் ஒரு பதினைந்து நாளாவது ஓட வேண்டும் என்றார்.

Related Posts