வலி.வடக்கு மீள்குடியமர்வை வலியுறுத்தி நாளைய தினம் கவனவீர்ப்புப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில், வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அடங்கும் பலாலி கிழக்கு (ஜே/253), பலாலி வடக்கு (ஜே/254) மற்றும் வலி. கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அடங்கும் வளலாய் (ஜே/284) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மீள்குடியமர்வு எப்போது இடம்பெறும் என்பது இந்த அறிவிப்பில் இடம்பெறவில்லை.
எனவே குறித்த மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களை, வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இன்று முதல் மீள்குடியமர்வுக்காக பதிவு செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அடங்கும் பலாலி கிழக்கு, பலாலி வடக்கு, வளலாய் பிரதேசங்களுக்கு, நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களை சில தினங்களுக்கு முன்னர் அழைத்துச் சென்று இராணுவத்தினர் காண்பித்திருந்தனர்.
இந்த நிலையில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நேற்றுக் காலை அவசர கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதில் யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், தெல்லிப்பழை பிரதேச செயலர் க.ஸ்ரீமோகனன், கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன், உடுவில் பிரதேச செயலர் மு.நந்தகோபாலன் மற்றும் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ளடங்கும் 24 கிராம சேவையாளர் பிரிவுகளுக்குமுரிய கிராம அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலின் பின்னர், வலி.வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி கிழக்கு மற்றும் பலாலி வடக்கை சொந்த இடமாகக் கொண்ட மக்களை மாத்திரம் வலி.வடக்கு பிரதேச செயலகத்தில் மீள்குடியமர்வுக்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறும் வலி.கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வளலாயை சொந்த இடமாகக் கொண்ட மக்களை மாத்திரம் வலி.கிழக்கு பிரதேச செயலகத்தில் மீள்குடியமர்வுக்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அரச அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
குடும்ப அட்டை, தேசிய அடையாள அட்டை, காணி உறுதி அல்லது சான்றுபடுத்தக் கூடிய ஆவணங்களைக் கொண்டு சென்று மீள்குடியமர்வுக்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இருப்பினும் எப்போது இந்த மீள்குடியமர்வு இடம்பெறும் என்பது தொடர்பில் அவர் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.
இதேவேளை – வலி.வடக்கு மீள்குடியமர்வை வலியுறுத்தி நாளைய தினம் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுளதுடன், கொழும்பில் பொதுநலவாய அமர்வுகள் இடம்பெறும் சூழ்நிலையிலேயே அரச அதிபரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
வலி வடக்கு நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நாளை மறுதினம் கவனயீர்ப்பு போராட்டம்!