மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வரம் கிடத்த போதிலும் அவர் தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம், நாடாளுமன்றத்தில் இருந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நேற்று திங்கட்கிழமையுடன் இழந்தது.
நாடாளுமன்றத்தில் 163 உறுப்பினர்களை அரசாங்கம் கொண்டிருந்தது. எனினும், அந்த எண்ணிக்கை நேற்றுடன் 148ஆக குறைந்துள்ளது. இதேவேளை, ஆளும் கட்சியிலிருந்து விலகிய 15 உறுப்பினர்களும் எதிரணியில் இணைந்துகொண்டனர். இதனால், எதிரணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 77ஆக அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டதை அடுத்து, கட்சித் தாவல்களும் குத்துக்கரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் எம்.பி.யான அமீர் அலி ஆகிய இருவரும் எதிரணியுடன் நேற்று இணைந்து கொண்டனர். இதேவேளை, எதிரணியிலிருந்து இருவர் ஆளும் தரப்புக்கும் இதுவரை மாறியுள்ளனர்.
2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத்தில் தனக்கு கிடைத்த மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் கடும் பிரயத்தனம் செய்தபோதும் அக்கனவு நேற்றுடன் கலைந்துவிட்டது.
இதேவேளை, அரசியலமைப்பின் அதிகாரத்தின் பிரகாரம் தற்போதைய ஜனாதிபதி, மற்றுமொரு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டத்தில் இடையூறு இல்லை என்று உயர்நீதிமன்றம் ஏகமனதாக தீர்மானித்துள்ளதால் ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது தடவையாகவும் போட்டியிடுவதற்கான வரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்தமையையடுத்தது அதில் மூழ்கியிருந்த அரசாங்கம் தனக்கிருந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அரசியலமைப்பின் 31(3)ஏ(1)(1) பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை செயற்படுத்தி மீண்டுமொரு தடவையை தெரிவு செய்து கொள்வதற்கு, போட்டியிடுவதற்கு சட்டத்தில் எந்தவொரு தடையும் இல்லை என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தமை தெரிந்ததே.