27 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ளது மயிலிட்டித் துறைமுகம்!

வலிகாமம் வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலய ஆக்கிரமிப்பில் இருந்து 27 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ளது மயிலிட்டித் துறைமுகம்.

இந்நிலையில் மயிலிட்டி துறைமுகத்தை விடுவித்து மக்களிடம் ஒப்படைக்க படைத்தரப்பு இணங்கியுள்ளது எதிர்வரும் 3 ஆம் திகதி திங்கட்கிழமை துறைமுகம் உட்பட துறைமுகத்தைச் சுற்றியுள்ள ஜே-249 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 54 #ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்பட்டு மாவட்ட அரச அதிபரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளது.

அன்று காலை 9 மணியளவில் இதற்கான நிகழ்வு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு படை நடவடிக்கையின் போது வலி.வடக்கின் பெரும்பாலான பகுதிகள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டன. இதனால் மிகச் சிறந்த மீன்பிடித் துறைமுகமான மயிலிட்டியும் படையினரின் ஆக்கிமிப்பில் இருப்பதால் பெரும்பாலும் கடற்றொழிலையே வாழ்வாதாரமாக் கொண்டிருந்த இந்தப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்து வாழ்வாதாரத்துக்கு வழியற்ற நிலையில் முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

மயிலிட்டித் துறைமுகத்தை விடுவிக்குமாறு அவர்கள் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
தற்போது ஆட்சி மாற்றத்தின் பின்னர் உயர்பாதுகாப்பு வலயக் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது மயிலிட்டி துறைமுகமும் விடுவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts