பருத்தித்துறை நீதிமன்ற நடவடிக்கைக்கு வந்திருந்தவர்கள் வைத்திருந்த 26 அலைபேசிகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட நீதவான் மா.கணேசராசா, நீதிமன்றத்துக்குள் அலைபேசிகளை கொண்டு வரவேண்டாம் என எச்சரிக்கை செய்த பின்னர் அவற்றை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்ற பொலிஸாருக்கு உத்தரவிட்ட சம்பவம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றது.
நீதிமன்ற நடவடிக்கைகள் நடந்துகொண்டிருந்த போது, நீதிமன்றத்துக்கு வருகை தந்த நபரொருவரின் அலைபேசி ஒலித்தது. இதனையடுத்து, அந்நபரது அலைபேசி மற்றும் நீதிமன்றத்துக்கு அலைபேசியைக் கொண்டு வந்த அனைவரது அலைபேசிகளையும் பறிமுதல் செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இனிவருங்காலங்களில் நீதிமன்றத்துக்கு வருபவர்கள், நீதிமன்ற வாசலிலுள்ள பொலிஸ் கண்காணிப்பு அலுவலகத்தில் தங்கள் அலைபேசிகளை கையளித்து அதற்கான அடையாள துண்டைப் பெற்று நீதிமன்ற நடவடிக்கையில் கலந்துகொள்ளலாம் என நீதவான் கூறினார்.
நீதிமன்றத்துக்குள் எவரும் அலைபேசிகளுடன் நுழைய முடியாது எனவும் இதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிப்படைகின்றன எனவும் நீதவான் சுட்டிக்காட்டினார்.