2500 கொடுப்பனவு ஜனவரி மாத சம்பளத்துடன் சேர்க்கப்படவில்லை

ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதாக கூறிய 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு, இதுவரை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
ஜனவரி மாத சம்பளத்துடன் வழங்கப்படாத 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு பெப்ரவரி மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என அரச ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியின்படி பெப்ரவரி மாத சம்பளத்துடன் அந்த கொடுப்பனவை வழங்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்க நேரிடும் என அரச ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனம் எச்சரித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கு தேவையான சுற்றறிக்கை வெளியிடப்படும் எனக் கூறியுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவில் 2 ஆயிரத்து 500 ரூபா ஜனவரி மாதம் முதல் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் என அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தில் வாக்குறுதி வழங்கியிருந்தது.

இந்த நிலையில், ஜனவரி மாத சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில் 2 ஆயிரத்து 500 ரூபா அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts