25 வருடமாக நாம் கூறி வருவதையே இன்று தூசி தட்டுகிறார் விக்னேஸ்வரன் – தவராசா

thavarasaஇருபத்தைந்து வருடங்களாக நாங்கள் கூறி வருவதை தூசி தட்டி எடுத்து புதிதாகக் கூறி வருகின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் விக்கினேஸ்வரன் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிடும் ஈ.பி.டி.பி. கட்சியின் முதன்மை வேட்பாளர் தவராசா தெரிவித்தார்.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதலாவது பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தலைமையில் நடைபெற்ற இந்தத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தொடர்ந்து தெரிவித்த ஈ.பி.டி.பி. கட்சியின் முதன்மை வேட்பாளர் தவராசா எமது முன்னணி ஆட்சிக்கு வந்தால் 13 ஆவது அரசியல் சீர்திருத்தச் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவோம் எனக்குறிப்பிட்டார்.

மேலும் கடந்த 25 வருடங்களாக எமது கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இதனையே கூறி வருகின்றார்.

இணக்க அரசியலின் மூலமாக இந்த 13 ஆவது சீர்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும் இம்முறை நாங்கள் வென்றால் இதில் உள்ள சர்ச்சைக்குரிய விடயங்களை அரசாங்கத்துடன் பேசி உடனடியாகவே நடைமுறைப் படுத்துவோம் எனக்குறிப்பிட்ட அவர் இதுவரைகாலமும் பிழையான அரசியல் வியூகங்களினால் எத்தனையோ உயிர்களை இழந்தோம். கோடிக்கணக்கான பெறுமதி வாய்ந்த உடமைகளை இழந்தோம். எமது இளைஞர் யுவதிகளின் கல்வியினை இழந்தோம் இந்த நிலை இன்னும் தொடர வேண்டுமா?

இப்படியான ஒரு இக்கட்டாக சூழலில் தங்கள் சுயலாபத்திற்காக அரசியல் நடத்த வேண்டும் என தங்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாது கங்கணம் கட்டி நிற்கும் கபட அரசியல்வாதிகளை மக்கள் இனம்கண்டு சரியானவர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு மக்களினது என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு உங்களைச் சாரும் என்று தெரிவித்தார்.

இந்தப் பிரசாரக் கூட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின், யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோரும் பங்கு பற்றியதுடன் யாழ் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி

ஐ.ம.சு.கூ தேர்தல் பிரசாரம் யாழில் ஆரம்பம்

Related Posts