25 ஆண்டுகளின் பின்னர் வசாவிளானை மக்கள் பார்வையிட அனுமதி

வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இருந்த வசாவிளான் கிழக்கு கிராமசேவையாளர் பிரிவு மக்கள் பாவனைக்காக இன்று கையளிக்கப்படவுள்ளது.

மீள் குடியமரவுள்ள மக்களை, குட்டியப்புலம் பிரதேசத்துக்கு இன்று காலை 10 மணிக்கு வருகை தருமாறு மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர் ஹரிம் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வலி.வடக்கு வலி.கிழக்குப் பிரதேச செயலா ளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆயிரத்து நூறு ஏக்கர் காணி விடுவிப்பதற்கு அமைச்சர வையில் தீர்மானம் எட்டப்பட்டிருந்தது. அதற்கமைய 6 கிராம சேவையாளர் பிரிவுகள் முதல் கட்டமாக விடுவிக்கப்படவுள்ளன. அவை ஒவ்வொன்றும் கண்ணிவெடி அகற்றப்பட்டதன் பின்னர் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை, வலி.கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வளலாய் கிராம சேவையாளர் பிரிவு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. குறித்த பிரதேசத்தில் தற்போது மக்கள் தங்க முடியாது. இருப்பினும் பார்வையிடவும், துப்புரவு செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று , வலி.வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வசாவிளான் கிழக்கு (ஜே/244) பிரதேசம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.

இந்தப் பிரதேசத்தில் மீளக்குடியமர்வதற்கு 411 குடும்பங்கள் வரையில் பிரதேச செயலகத்தில் பதிவு செய்திருந்தன. தற்போது மீள்பதிவின் போது 221 குடும்பங்கள் தங்கள் பதிவுகளை உறுதிப்படுத்தியுள்ளன.

வசாவிளான் கிழக்கைச் சேர்ந்த மக்கள், இன்று காலை 10 மணிக்கு குட்டியப்புலத்திலுள்ள, இராணுவ எல்லைப் பகுதிக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts