23 வருடங்களின் பின் 15 மில்லியன் ரூபா செலவில் ஆனையிறவுக்கான புதிய ரயில் நிலையம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நாளை இடம்பெறவுள்ளது.
கல்வி அமைச்சினால் வழங்கப்படும் நிதியுதவி மூலம் சகல வசதிகளுடன் கூடிய புதிய ரயில் நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி புதிய ரயில் நிலையத்திற்கான நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
யுத்தம் காரணமாக சேதமடைந்த வட வகுதிக்கான ரயில் பாதை புதிதாக விஸ்தரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், சுமார் 23 வருடங்களுக்கு பிறகு முதற்தடவையாக ஆணையிறவுக்கான ரயில் நிலையம் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
வட பகுதி மக்களின் நலனை கருத்திற்கொண்டு கிழக்கு உட்பட எட்டு மாகாணங்களிலுள்ள பாடசாலை மாணவ, மாணவிகள், ஆசிரியர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 15 மில்லியன் ரூபா செலவிலேயே இந்த புதிய ரயில் நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை, பாடசாலை மாணவர்கள் மற்றும் மாகாண சபைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு என்பவற்றின் பிரதிபலிப்பாகவே கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இந்த நிதி சேகரிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் ஆணையிறவு ரயில் நிலையம் அமைந்திருந்த அதே இடத்திலேயே புதிய ரயில் நிலையமும் நிர்மாணிக்கப்படவுள்ளது என்று தெரிவித்த அவர், இவ்வாண்டு இறுதிக்குள் அதன் நிர்மாணப் பணிகள் நிறைவடையவுள்ளது என்றார்.