2/3 பெரும்பான்மையைப் பெற்று தமிழரின் பலத்தை நிரூபிப்போம்; கூட்டமைப்பு எம்.பிக்கள் சூளுரை

tnaவட மாகாணசபைத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வெற்றியீட்டி சர்வதேச சமூகத்துக்கு நல்லதொரு செய்தியை நாம் எடுத்துக் கூற வேண்டும். இதுதான் எமது அடுத்த கட்ட நகர்வின் அடித்தளமாக இருக்கும்.

இவ்வாறு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கூட்டாக வலியுறுத்தினர்.

வடமராட்சியில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலிலேயே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தெரிவித்தனர். இதன்போது அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

வட மாகாணசபைத் தேர்தலை சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது. தமிழ் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் வேட்பாளர்களை ஆதரித்து தாங்கள் வாக்குகளை அளிக்கவேண்டும்.

யாழ். மாவட்டத்தில் தற்போது ஈ.பி.டி.பியின் அராஜகம் அதிகரித்துள்ளதால் அவர்களுக்கான மக்கள் செல்வாக்கு குறைவடைந்து செல்கின்றது. அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஈ.பி.டி.பிக்குமிடையில் பனிப்போர் மூண்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் அணி திரண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிப்பதுடன், வேட்பாளர்களுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களும் தேர்தல் பரப்புரைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்” என்று கோரினர்.

பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் நகரசபைத் தலைவர் சட்டத்தரணி சபா.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பருத்தித்துறை நகரசபை, பிரதேசசபை, கரவெட்டி பிரதேசசபை, வல்வெட்டித்துறை நகரசபை ஆகியவற்றின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பின் வடமராட்சி வேட்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Posts