220 பேர் தொடர்பில் இதுவரை தகவல் இல்லை

இயற்கைப் பேரனர்த்தத்தினால் இலட்சக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளதுடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

vellam-colombo

இதேவேளை, ஆகக்குறைந்தது 173 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, 414,627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மலையகத்தில் மண்சரிவுகளும், தாழ்நிலப்பிரதேசங்களில் வெள்ளமும் சூழ்கொண்டுள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுமுழுதாகப் பாதிப்படைந்துள்ளது.

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மட்டுமன்றி, அவர்களின் உறவினர்கள் மற்றும் துயர்பகிரச் செல்வோரும் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். பாரிய அழிவுகளை ஏற்படுத்திய அரநாயக்க, சாமசர மலைச்சரிவில் சடலங்கள் புதையுண்டுள்ளன. அந்த மலையின் ஒருபகுதி சரிந்து, மூன்று கிராமங்களின் மீது விழுந்ததில் புதையுண்டவர்களில் 144 பேர் தொடர்பில், எதுவிதமான தகவல்களும் இல்லை என்றும் 19 பேரின் சடலங்கள் மட்டுமே, நேற்று வியாழக்கிழமை மாலை வரையிலும் மீட்கப்பட்டுள்ளன.

அரநாயக்க, சாமசர மலை சரிந்து வருவதால், மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த படைவீரர்கள் மற்றும் பொலிஸாரும், பாதுகாப்பான பிரதேசங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அரநாயக்கவிலுள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த 135 வீடுகள் புதையுண்டுள்ளனவெனவும், அவ்வீடுகளில் வசித்தோரது 19 சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளனவெனவும் கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஜகத் மகேந்திர கூறினார்.

குறித்த கிராமங்களில் வசித்த 220 பேர் தொடர்பில் இதுவரை தகவல் இல்லை என்றும் குறித்த கிராமங்களைச் சேர்ந்தவர்களும் அயல் கிராமங்களைச் சேர்ந்தவர்களுமென சுமார் 1,700பேர், 9 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஜகத் மகேந்திர கூறினார்.

அரநாயக்க, போடாபே மலை மற்றும் ஜனபத மலை ஆகியனவும் மணிசரிவுக்கு உள்ளாகும் நிலையில் உள்ளதாகவும் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்களைத் தொடர்ந்து அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகளை முன்னெடுத்து வருவதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட புளத்கொஹுபிட்டிய, களுபஹன, அரந்தர தோட்டத்தில் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக, காணாமல் போனவர்களில், மேலும் ஐவரது சடலங்கள், நேற்று (19) மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மலைப்பாங்கான பிரதேசங்களில் வாழ்வோர், அந்த மலையில், இயற்கைக்கு அப்பாலான மாற்றங்கள் தென்பட்டால், அப்பகுதியிலிருந்து விலகி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Related Posts