21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை மற்றும் சட்டவிரோத சாராயம் விற்பனை செய்த 24 வர்த்தகர்களுக்கு 47,500 ரூபா தண்டப்பணம், யாழ். மற்றும் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றங்களினால் அறவிடப்பட்டுள்ளதாக யாழ். மதுவரி நிலைய பொறுப்பதிகாரி என்.கிருபாகரன் தெரிவித்தார்.
யாழ். மதுவரி நிலைய எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மதுவரி நிலைய பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட் மற்றும் பீடி விற்பனை செய்த 20 வர்த்தகர்களுக்கு எதிராகவும், சட்டவிரேதமாக சாராயம் மற்றும் கள்ளு விற்பனை செய்த 4 பேருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று இரு நீதிமன்றங்களிலும் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
மேற்படி, 24 வர்த்தகர்களில் 21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த ஊர்காவற்துறை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட 10 வர்த்தகர்களுக்கு தலா 2,500 ரூபா வீதம் 25,000 ரூபாவும், கள்ளு விற்பனை செய்த 3 வர்த்தகர்களுக்கு 2,500 ரூபாவும் அறவிட்டதுடன், யாழ். நீதிமன்ற எல்லைக்குட்பட்ட 10 வர்த்தகர்களுக்கு தலா 1000 ருபா வீதம் 10,000 ரூபாவும், சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்த வர்த்தகருக்கு 10,000 ரூபாவும் தண்டம் நீதிமன்றங்களினால் அறவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.